×

எலியட்ஸ் கடற்கரையில் ரூ.88 லட்சம் செலவில் நவீன மீன் அங்காடி

சென்னை: எலியாட்ஸ் கடற்கரையில் ரூ.88 லட்சம் செலவில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படவுள்ளது. போதிய வசதிகளின்றி செயல்படும் மீன் அங்காடிகளை நவீன முறையில் சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது. அதில் குறிப்பாக,சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து, மிகப்பெரிதாக விளங்குவது சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை. இது ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் மிக பழமையான மீன் சந்தை. இங்கு மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் ஒரே இடத்தில் நடைபெறுகிறது.

அதிகாலை முதலே இச்சந்தை சுறுசுறுப்பாக இயங்க தொடங்கிவிடும். உள்ளூர் மீன்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த சிறு மீன்கள் முதல் ராட்சத மீன்கள் வரை இங்கு விற்பனையாகின்றன. அசைவ உணவு பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை வாங்க, காலை முதலே சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைக்கு வரத் தொடங்குகின்றனர். ஞாயிறுகளில் கூட்டம் இரட்டிப்பாகும். இந்த சந்தை குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கடைகள் அருகருகே இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.

இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் மீன்களின் கழிவுகள் சாலையிலேயே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி, கடந்த ஆண்டு இங்கு நவீன மீன் அங்காடி அமைக்க ஒப்புதல் அளித்தது.

சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 1,247 ச.மீ. பரப்பளவுள்ள இடத்தில் 1,022 ச.மீ. பரப்பளவில் 102 கடைகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடம், புயலில் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், மீன் கழிவுநீரை பயோ டைஜிஸ்ட்க்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால் மற்றும் வாகன நிறுத்தம் போன்ற அம்சங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், தற்போது இங்கு இரும்பிலான கூரை அமைப்பது, தரை அமைத்தல் மற்றும் கழிவறை பணிகள் சுமார் 45% முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி இம்மாத இறுதியில் திறக்கப்படவுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் இது போன்று நவீன மீன் அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டில் பெசன்ட் நகரில் மீன் அங்காடி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக அனுமதியில்லாததால் அது ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து எலியட்ஸ் கடற்கரையில் மீன் அங்காடி அமைப்பதற்கு ரூ.83.09 லட்சத்திற்கு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரை கடிதம் பெறப்பட்டது. பின்னர் கூடுதலாக ரூ.5.05 லட்சத்திற்கு பரிந்துரை கடிதம் இந்தாண்டு பெறப்பட்டது. தற்போது எலியட்ஸ் கடற்கரையில் நவீன மீன் அங்காடி அமைக்கும் பணிகளுக்கான மதீப்பிடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு சில மாதங்களில் இதற்கான டெண்டர் அழைக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார்.

The post எலியட்ஸ் கடற்கரையில் ரூ.88 லட்சம் செலவில் நவீன மீன் அங்காடி appeared first on Dinakaran.

Tags : Elliot Beach ,Chennai ,Municipality ,Kasimedu Fish Market ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு