×

தமிழகம் வந்து திரும்பிய 5 நாட்களுக்குள் பிரதமர் இன்று மீண்டும் சென்னை வருகை: பாஜ பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை: தமிழகம் வந்து திரும்பிய 5 நாட்களுக்குள் பிரதமர் மோடி இன்று மீண்டும் சென்னை வருகிறார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி அடுத்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணி அமைப்பதற்காக பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதே போல பாஜ கூட்டணியில் தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெற்றுள்ளன. அதே போல ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனும் பாஜ பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை தமிழக பாஜ தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த 27, 28 ஆகிய 2 நாட்கள் தமிழகம் வந்தார். அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லையில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் இன்று பகல் 1.15 மணிக்கு மகாராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கு சாலை மார்க்கமாக மாலை 3.30 முதல் 4.15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார். மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 6.20 மணிக்கு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலங்கானாவுக்கு செல்கிறார். அங்கு இரவு 7.45 மணிக்கு சென்றடையும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன் பறக்க விட தடை

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பிரதமர் மோடி வருகையின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை என மொத்தம் 15,000 போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம், சென்னை விமான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் பிரதமர் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் 2 நாட்களாக விடிய சோதனை நடத்தி, சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து
வருகின்றனர்.

அதேபோல், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறை பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த பிரதமர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து மாநகர காவல்துறை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது. மேலும், குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

The post தமிழகம் வந்து திரும்பிய 5 நாட்களுக்குள் பிரதமர் இன்று மீண்டும் சென்னை வருகை: பாஜ பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,BJP ,Modi ,Nandanam, Chennai ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...