×

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தமிழர்களை சோதனை எலிகளாக்கும் மோடி

* தலைவர்கள், சூழலியலாளர்கள் கண்டனம்,

* உலகநாடுகள் கைவிட்ட ஆபத்தான திட்டத்தை தொடங்க எதிர்ப்பு

சென்னை: கல்பாக்கத்தில் 500 மெகாவாட். திறன் கொண்ட ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழர்களை சோதனை எலிகளாக ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் நினைப்பதாக கூறி, அரசியல் கட்சி தலைவர்கள், சூழலியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் கல்பாக்கத்தில் நடைபெறும் ஒன்றிய அரசு விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மாலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில் கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தமிழர்களை சோதனை எலிகளாக ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் நினைப்பதாக கண்டன குரல்கள் வலுத்துள்ளன.

மேலும் தமிழகத்திற்கு ஆபத்து விளைவிக்கும், நாசகார ஈனுலைகள் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை:ஒன்றிய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுஉலை வளாகத்தில் பாவினி நிறுவனம் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைக் கட்டியுள்ளது. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட இந்த ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை கைவிட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த உலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாரச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.

அணுவுலைகளில் இருந்து உருவாகும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளான புளூட்டோனியத்தை ஈனுலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் இத்திட்டம். கடந்த ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதிர்காலத்தில் கூடுதல் அணு அலகுகள் அமைப்பது தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்’ என்று மேலோட்டமாக ஒரு தகவலைத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்வித பங்களிப்பும் தராத உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட ஒரு ஆபத்தான தொழில்நுட்பத்தை கல்பாக்கத்தில் தொடங்கும் மோடி அரசின் சூழ்ச்சியை நாம் எதிர்க்க வேண்டும். ஒன்றிய பா.ஜ. அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் கட்டப்படும் அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ஈனுலை அமைத்து வரும் பாவினி நிர்வாகத்திடமிருந்தும் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன. பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால், இந்த உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.

கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என ஒன்றிய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ அரசு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே திணிக்க நினைக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே ஒன்றிய பா.ஜ அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பத்தை கைவிட்டுவிட்டன. தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்விதப் பங்களிப்பும் தராத உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட ஓர் ஆபத்தான தொழில்நுட்பத்தை கல்பாக்கத்தில் தொடங்கும் மோடி அரசின் சூழ்ச்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். பா.ஜ ஆளும் மாநிலங்களில் அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ அரசு தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களைச் சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்க முடியாது.

தமிழ்நாடு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்காத பா.ஜ அரசு தொடர்ந்து நாசகாரத் திட்டங்களைத் தமிழ்நாட்டில் அமைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நாசகாரத் திட்டத்தைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

* ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை கைவிட்டுவிட்டன.

* பா.ஜ. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

The post கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தமிழர்களை சோதனை எலிகளாக்கும் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Kalpakkam ,Tamils ,Enule ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...