×

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 172 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

வெலிங்டன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட டி.20 தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 383 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் நாட் அவுட்டாக 174 ரன் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 179 ரன்னுக்கு சுருண்டது. பிலிப்ஸ் அதிகபட்சமாக 71 ரன் எடுத்த நிலையில், ஆஸி. பவுலிங்கில் நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 204 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன்லயன் 41 ரன் எடுக்க 51.1 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலிங்கில் பிலிப்ஸ் 5 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 369 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் லதாம் 8, வில்யங் 15, வில்லியம்சன் 9 ரன்னில் அவுட் ஆகினர். நேற்றைய 3ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன் எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 56, டேரில் மிட்செல் 12 ரன்னில் களத்தில் இருந்தனர்.

4வதுநாளான இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரச்சின் ரவீந்திரா 59 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்துவந்த டாம் ப்ளன்டெல் ரன் எதுவும் எடுக்காமலும், பிலிப்ஸ் ஒரு ரன்னிலும் நாதன்லயன் பந்தில் அவுட் ஆகினர். ஸ்காட் குகெலீஜ்ன் 26 ரன்னில் கிரீன் பந்திலும், மாட்ஹென்றி 14 ரன்னில் ஹேசல்வுட் பந்திலும் , கேப்டன் சவுத்தி 7 ரன்னில் நாதன்லயன் பந்திலும் ஆட்டம் இழந்த நிலையில் கடைசி விக்கெட்டாக டேரில் மிட்செல் 38 ரன்னில் அவுட் ஆனார். முடிவில் 64.4 ஓவரில் 196 ரன்னுக்கு நியூசிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் 172 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் நாதன் லயன் 6 விக்கெட் அள்ளினார். கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் வரும் 8ம்தேதி தொடங்குகிறது.

The post நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: 172 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Australia ,Wellington ,cricket ,T20 ,Dinakaran ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து