×

சிவகாசி-சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்ட முதற்கட்ட பணி துவங்கியது: நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

சிவகாசி, மார்ச் 3: சிவகாசி-சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது. மதுரை-செங்கோட்டை அகல ரயில் பாதையில் சிவகாசி வழியாக தினசரி பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை – குருவாயூர், செங்கோட்டை மயிலாடுதுறை, சென்னை-கொல்லம், மதுரை-செங்கோட்டை ஆகிய ரயில்களும், சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் 3 நாட்களும், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயில் வாரம் இரு நாட்களும், திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் ரயில் வாரம் ஒரு முறையும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் பாதையில் சிவகாசி-விருதுநகர் சாலையில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங் (424), சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் (427) மேம்பாலம் இல்லாததால் ரயில்வே கேட் மூடப்படும் போது சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் ஒவ்வொரு முறையும் ரயில் செல்லும் போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சிவகாசி மற்றும் திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க 2,818 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 23 நில உரிமையாளர்களுக்கு ரூ.28 கோடி வழங்கப்பட்டது.

சிவகாசி பெரியகுளம் கண்மாய் அருகே இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.64 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கடந்த 26ம் தேதி அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டிய இரு நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் நில அளவீடு பணிகளில் ஈடுபட்டனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பாலம் அமைய உள்ள இடத்தை அளவீடு செய்யும் பணி நடக்கிறது. விரைவில் கட்டுமான பணி தொடங்கும் என்றனர்.

The post சிவகாசி-சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்ட முதற்கட்ட பணி துவங்கியது: நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை appeared first on Dinakaran.

Tags : Sivakasi-Chatsiapuram Railway Crossing ,Sivakasi ,Sivakasi-Chatsiapuram ,Madurai-Sengottai ,Potikai ,Express ,Madurai ,Guruvayur ,Sengottai Mayiladuthurai ,Chennai ,Kollam ,Sengottai ,Silampu… ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து