×

விவசாயக் கடன் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், மார்ச் 3: கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, விவசாயிகள் பயிர் சாகுபடி பணியினை தங்கு தடையின்றி மேற்கொள்ளவும், வேளாண் இடுபொருட்களை உரிய நேரத்தில் பெற்று பயன்படுத்தவும் விவசாய கடன் அட்டை வழங்குதல் திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான பால்பண்ணை, கால்நடை பராமரித்தல் மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றிற்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடன்களுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெறமுடியும். விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகள் 7% வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். விவசாய கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தங்களது நில ஆவணங்களான பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் தங்களுக்கு அருகே உள்ள வங்கி கிளையிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குதலை துரிதப்படுத்திட அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் 4.3.2024, 5.3.2024, 6.3.2024 மற்றும் 7.3.2024 ஆகிய நாட்களில் வேளாண்மைத் துறை, வங்கித்துறை மற்றும் கூட்டுறவுத் துறையும் இணைந்து முகாம் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகள் அதனை புதுப்பித்துக் கொள்ளவதற்கும் அல்லது புதியதாக கிசான் கடன் அட்டை வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் இம்முகாமில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post விவசாயக் கடன் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Special Camp ,Ramanathapuram ,Collector ,Vishnu Chandran ,Dinakaran ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...