×

பரமக்குடியில் முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா

பரமக்குடி, மார்ச் 3: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது. ஆட்டம், பட்டத்துடன் பழமை மாறாமல் பக்தர்கள் மூங்கில் கூடைகளில் பூக்களை கொண்டு வந்து நேர்த்திக் கடனாக செலுத்தினர். பரமக்குடியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக பூச்சொரிதல் நடப்பது வழக்கம். இந்தாண்டு பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் மூங்கில் கூடைகளில் மலர்ந்த பூக்களை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இந்த மலர்களை வைத்து அம்மனுக்கு அலங்காரம் செய்யும்போது அம்மன் மனம் குளிர்ந்து வறட்சியான ராமநாதபுரம் மாவட்டம் வளம்பெற்று செழிமையாகவும், மக்கள் நோயின்றி இருக்கவும் காலங்காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

மூங்கில் கூடைகளில் மலர்ந்த பூக்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு நேர்த்திக் கடனாக பக்தர்கள் செலுத்துகின்றனர். இந்த மலர்கள் அனைத்தும் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. கோயில் மூலஸ்தலத்தில் இருந்து நுழைவு பகுதி வரை மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் அம்மனுக்கு படைக்கப்பட்ட மலர்கள் பக்தர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது. இதனை கொண்டு சென்று வீட்டில் வைத்தால் அனைத்து செல்வ வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம், இதனையடுத்து காலம் காலமாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை மாறாமல் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா நடைபெற்று வருகிறது.

குழந்தைகள் ஒயிலாட்டம், பரத நாட்டியம் ஆடி அசத்தினர். பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் பூச்சொரிதல் திருவிழாவை கொண்டாடினர். மார்ச் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனி திருவிழாவில் மார்ச் 24ம் தேதி தேரோட்டமும், 27ம் தேதி பால்குட வைபவமும் நடைபெற உள்ளது.

The post பரமக்குடியில் முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Blossoming festival ,Muthalamman Temple ,Paramakudi Paramakudi ,Paramakudi Muthalamman Temple ,Paramakudi ,
× RELATED முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் தேரோட்டம்