×

தகுதி நீக்க எம்எல்ஏ பரபரப்பு; இன்னும் 9 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளார்கள்: இமாச்சலில் காங்கிரசுக்கு சிக்கல்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மேலும் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரஜிந்தர் ரானா கூறி உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை எம்பி தேர்தலில் ஆளும் காங்கிரசின் 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை பலம் இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து, கட்சி மாறி வாக்களித்த 6 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதற்காக சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பியது.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவதாக இமாச்சல முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியிருந்தார். இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான ரஜிந்தர் ரானா அளித்த பேட்டியில், ‘‘முதல்வர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். நாங்கள் யாரும் திரும்பி வர மாட்டோம். அதோடு இன்னும் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்றார்.

இதற்கிடையே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் தனது பேஸ்புக் சுயவிவரத்தில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் என்பதையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்பதையும் நேற்று நீக்கி உள்ளார்.

2 அமைச்சர்கள் பாதியில் வெளியேறினர்
இமாச்சல அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொள்கை முடிவு எடுப்பதில் மோதல் ஏற்பட்டு கல்வி அமைச்சர் ரோகித் தாக்கூர், வருவாய் அமைச்சர் ஜகத் நெகி ஆகியோர் பாதியில் வெளியேறினார்கள். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தகுதி நீக்க எம்எல்ஏ பரபரப்பு; இன்னும் 9 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளார்கள்: இமாச்சலில் காங்கிரசுக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Shimla ,MLA ,Rajinder Rana ,Himachal Pradesh ,Rajya ,Sabha ,Himachal ,
× RELATED ஊட்டி காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ காலமானார்