×

மே.வங்கத்தில் 42 தொகுதியும் வேண்டும்: பிரதமர் மோடி பிரசாரம்

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் நேற்று நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு வங்க மாநில அரசு செயல்படும் விதத்தால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புடன் திரிணாமுல் காங்கிரசை பலமுறை வெற்றி பெறச் செய்தனர். ஆனால், கொடுங்கோன்மைக்கும், வாரிசு அரசியலுக்கும், துரோகத்திற்கும் மற்றொரு பெயராக திரிணாமுல் காங்கிரஸ் மாறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் என்பதன் பெயர் சுருக்கம், நீ, நான், நமது ஊழல் என்றாகி விட்டது. மேற்கு வங்கத்தின் பெயரையே திரிணாமுல் காங்கிரஸ் கெடுத்து விட்டது.

அரசின் ஒவ்வொரு நலத்திட்டத்தையும் ஊழல் திட்டமாக மாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுவதை தடுக்கும் திரிணாமுல் அரசு, ஒன்றிய அரசின் திட்டங்களை கையகப்படுத்தி தனது சாதனைகளாக போலி ஆதாயம் தேடப் பார்க்கிறது. மேற்கு வங்கத்தில் தாய்மார்கள், சகோதரிகளின் நல்வாழ்வை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு தவறி விட்டது. குற்றவாளிகள் செல்வாக்குடன் உள்ளனர். அவர்கள் எப்போது கைது செய்யப்பட வேண்டுமென்பதை போலீஸ் தீர்மானிக்கவில்லை, மாறாக குற்றவாளிகள் தான் முடிவு செய்கிறார்கள்.

சந்தேஷ்காலி விவகாரத்தில் முக்கிய குற்றவாளி ஷாஜகான் ஷேக் கைது செய்யப்படுவதை மாநில அரசு விரும்பவில்லை. ஆனால் இம்மாநில பெண்கள் துர்கையாக மாறி கொந்தளித்த போது, பாஜ தொண்டர்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றதால் மாநில அரசு வேறு வழியின்றி வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று. தேசத்தின் முன்னேற்றத்திற்கும், மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்திற்கும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். எனவே இங்குள்ள 42 தொகுதியிலும் பாஜவை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது இலக்கு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

‘பாஜவுடன் இருப்பேன்’ நிதிஷ்குமார் வாக்குறுதி
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து பீகாரின் அவுரங்காபாத்தில் ₹21,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், ‘‘வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாரிசு அரசியல் தலைவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் நாடாளுமன்றத்தில் நுழைய மாநிலங்களவை பாதையை நாடுகிறார்கள்’’ என்றார். அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘‘மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும். இனி எப்போதும் பாஜ கூட்டணியிலேயே நீடிப்பேன்’’ என்றார்.

The post மே.வங்கத்தில் 42 தொகுதியும் வேண்டும்: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,PM Modi ,Krishna Nagar ,Nadia district ,West Bengal ,Modi ,West Bengal state government ,TRINAMUL ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…