×

ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் மாமல்லபுரம் கடலில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி?: ஒருவர் உடல் மீட்பு

சென்னை: ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்து, மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலம் மீட்கப்பட்டது. 4 பேரின் உடலை தீயணைப்பு மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் இயங்கும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 18 பேர், சித்தூர் மாவட்டம் நவகாம் பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 40 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு பேருந்து மூலம் நேற்று காலை மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். பின்னர், 2 குழுக்களாக பிரிந்து பல்லவ மன்னர்களின் புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து ஒரு குழுவை சேர்ந்த 20 மாணவர்கள் காலை 10 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வலது புறத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்று மணலில் நடந்தும், ஓடி பிடித்தும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 10 மாணவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக குளியல் போட்டுள்ளனர். திடீரென எழுந்த ராட்சத அலை 10 பேரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதையடுத்து, அருகில் இருந்த சக மாணவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், ராட்சத அலை அவர்களை நடுக்கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. சக மாணவர்கள், சுற்றுலா வந்த பயணிகள் மற்றும் கடைக்காரர்கள் கூச்சல் போட்டனர்.

தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு மற்றும் கடலோர காவல் படை வீரர்கள் விரைந்து வந்தனர். மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், ராஜி, விஜி, சதீஷ் மற்றும் மணிமாறன் ஆகியோர் சர்பிங் பலகை மூலம் கடலுக்குள் சென்று நீண்ட போராட்டத்துக்கு பிறகு 6 பேரை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களில் விஜய் (18) கரைக்கு வந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் (19) ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 4 மாணவர்களும் சகஜ நிலைக்கு திரும்பினர். உயிரிழந்த விஜயின் உடலை மாமல்லபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாயமான மோனிஷ் (19), பார்த்தி (18), ஷேசா ரெட்டி (18), பெத்து ராஜ் (19) ஆகிய 4 மாணவர்களை மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படை வீரர்கள் படகு மூலம் தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை.

தேடுதல் தீவிரம்
மாணவர்கள் 4 பேர் மாயமானதை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் இருந்து ஆழ்கடலில் இறங்கி தேடும் 7 பேர் கொண்ட வீரர்கள் வரவழைக்கப்பட்டு நவீன உபகரணங்கள் கூடிய ரப்பர் படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர். அப்போது, கடற்கரைக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கடலில் குளிக்கக் கூடாது என தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல் படை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

The post ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் மாமல்லபுரம் கடலில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி?: ஒருவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Mamallapuram ,CHENNAI ,Andhra Pradesh ,Coast Guard ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...