×

ஓட்டலில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; பெங்களூருவில் தீவிர விசாரணை: குற்றவாளிகள் விரைவில் கைதாவார்கள்; முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவைத்த நபரையும், அவருடன் தொடர்புடைய மற்றவர்களையும் மிகத்தீவிரமாக தேடிவருகின்றனர்.

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு, 10 நொடி இடைவெளியில் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இருந்த சிசிடிவி மற்றும் அப்பகுதியில் இருந்த மற்ற சிசிடிவி என மொத்தம் 300 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆழமாக ஆய்வு செய்து, அதனடிப்படையில் குண்டுவைத்த நபரை தேடிவருகின்றனர்.

அந்தவகையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணிக்கு ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மேலும் மூவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். ஆனால் இதுவரை யாரையும் அதிகாரப்பூர்வமாக கைது செய்யவில்லை. காடுகோடியிலிருந்து குந்தலஹள்ளிக்கு வந்த எண் 335 பேருந்தில் வந்து இறங்கிய நபர் தான் ஓட்டலில் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு, பையையும் அங்கு வைத்துவிட்டு, டைமரை செட் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். மாநகரம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் போலீசார் மப்டியில் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே குண்டுவெடித்த ராமேஸ்வரம் கபேவிற்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை விவரங்களை காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் சித்தராமையா, மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,’ இந்த குண்டுவெடிப்பில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்த நபர் பயணம் செய்த பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. எனவே விரைவில் குண்டு வைத்த அந்த நபர் கைது செய்யப்படுவார். மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு தொடர்பு
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘பெங்களூரு மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுதான்; குற்றவாளியின் முகம் சிசிடிவி கேமராக்களில் 4 கோணத்தில் பதிவாகியுள்ளது. 2022ம் ஆண்டு மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கும், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புக்கும் தொடர்பிருக்கிறது என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்’ என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

The post ஓட்டலில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; பெங்களூருவில் தீவிர விசாரணை: குற்றவாளிகள் விரைவில் கைதாவார்கள்; முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Chief Minister ,Siddaramaiah Scheme ,Rameswaram Cafe Hotel ,Rameswaram Cafe ,Kundalahalli, Bengaluru ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்