×

தேர்தல் பணிக்கு சேலம் வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை

சேலம்: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சேலம் வந்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த, தேர்தல் பாதுகாப்பு பணியில் பல்வேறு படை பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 3.4 லட்சம் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகத்திற்கு நேற்று கொச்சியில் உள்ள துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த கம்பெனி, ரயில் மூலம் கோவைக்கு வந்தது. அங்கிருந்து சேலம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஒரு கம்பெனியினர் (92 பேர்) சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை சேலம் மாநகர போலீசார், போலீஸ் வாகனத்தில் கோவைக்கு சென்று நேற்றிரவு சேலத்துக்கு அழைத்து வந்தனர்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் எதிரில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பறக்கும்படை, சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு படை, மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிக்கு வரவுள்ளனர்’ என்றனர்.

The post தேர்தல் பணிக்கு சேலம் வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை appeared first on Dinakaran.

Tags : Central Industrial Security Force ,Salem ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!