×

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான 225 எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி: முதல் 3 இடத்தில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான 225 எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி என்று தெரிய வந்துள்ள நிலையில், முதல் 3 இடத்தில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக கட்சிகள் உள்ளன. தேர்தல் சீர்திருத்த அமைப்பான ‘ஜனநாயக சீர்திருத்த சங்கம்’ (ஏடிஆர்) மற்றும் ‘நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வில், ‘நாடாளுமன்ற ராஜ்யசபாவில் உள்ள 233 உறுப்பினர்களில், 225 எம்பிக்களின் பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி ராஜ்யசபாவில் தற்போது உள்ள 225 உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.19602 கோடியாக உள்ளது. அதாவது ஒவ்வொரு உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடியாகும். பணக்கார எம்பிக்கள் பட்டியலில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

பாஜகவின் 90 பேரில் 9 பேர், காங்கிரசின் 28 பேரில் 4 பேர், ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 11 பேரில் 5 பேர், ஆம் ஆத்மியின் 10ல் 2 பேர், பிஆர்எஸின் 4 பேரில் 3 பேர், ஆர்ஜேடி-யின் 6 பேரில் 2 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். கட்சி வாரியாக பார்த்தால், பிஆர்எஸ் உறுப்பினர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.1,384 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினரின் சொத்து மதிப்பு ரூ.358 கோடி, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரின் சொத்து மதிப்பு ரூ.114 கோடி, காங்கிரஸ் உறுப்பினரின் சொத்து மதிப்பு ரூ.40.70 கோடி, பாஜக உறுப்பினரின் சொத்து மதிப்பு ரூ.37.34 கோடி என்று பட்டியல் நீள்கிறது.

கட்சி வாரியாக உறுப்பினர்களின் சொத்துக்களை பார்த்தால், பிஆர்எஸ் உறுப்பினர்களின் மொத்த சொத்து ரூ.5,534 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களின் மொத்த சொத்து ரூ.3,934 கோடி, பாஜக உறுப்பினர்களின் சொத்து ரூ.3,360 கோடி, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் சொத்து ரூ.1,148 கோடி, காங்கிரஸ் உறுப்பினர்கள் சொத்துக்கள் ரூ.1,139 கோடியாக உள்ளது. குற்றப் பின்னணி விபரங்களை பார்த்தால், மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 75 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 40 பேர் மிகவும் கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதில் அதிகபட்சமாக மா.கம்யூ. எம்பிக்களில் 80%, ஆர்ஜேடி எம்பிக்களில் 67%, காங்கிரஸ் எம்பிக்களில் 50%, டிஎம்சி எம்பிக்களில் 38%, ஒய்எஸ்ஆர் எம்பிக்களில் 36%, ஆம் ஆத்மி எம்பிக்களில் 30%, பாஜக எம்பிக்களில் 23% பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில வாரியாக கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ள எம்பிக்களின் பட்டியலில், கேரளாவில் 67%, மகாராஷ்டிரா 61%, பீகார் 50%, மேற்கு வங்கம் 44%, உத்தரபிரதேசம் 29% என்ற அடிப்படையில் குற்ற வழக்குகள் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான 225 எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி: முதல் 3 இடத்தில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக appeared first on Dinakaran.

Tags : Parliament ,PRS ,YSR Congress ,BJP ,New Delhi ,Democratic Reform Association ,ADR ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...