×

சேலம்-சென்னை இடையே விரைவில் மாலை நேர விமானம் இயக்கம்: திமுக எம்பியிடம் ஒன்றிய அமைச்சர் உறுதி

சேலம்: சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி ஆகிய 4 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், சேலம்-சென்னை இடையே மதிய நேரத்தில் இண்டிகோ நிறுவனம் விமானத்தை இயக்கி வருகிறது. சென்னையில் முற்பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 12.15 மணிக்கு விமானம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் சேலத்தில் மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.

இந்த விமான சேவையை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட தொழிலதிபர்கள், வணிகர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சேலம்-சென்னை விமானம் இருமார்க்கத்திலும் எப்போதும் நிரம்பிச் செல்கிறது. இதன்காரணமாக சேலம்-சென்னை இடையே மாலை நேரத்தில் மேலும் ஒரு விமானம் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுதொடர்பாக சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்தார்.

இதனைதொடர்ந்து சேலம்-சென்னை இடையே மாலை நேரத்தில் மற்றொரு விமான சேவையை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதியளித்துள்ளார். இதுபற்றி எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி கூறுகையில், `சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை வழங்க ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.

அக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால், விரைவில் சேலத்தில் இருந்து மாலை நேர விமான சேவை தொடங்கும். சேலம் விமாநிலைய விரிவாக்கத்திற்கு இன்னும் 110 ஏக்கர் நிலத்தை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், இரவு நேர விமான சேவையும் வரும். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post சேலம்-சென்னை இடையே விரைவில் மாலை நேர விமானம் இயக்கம்: திமுக எம்பியிடம் ஒன்றிய அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Salem- ,Chennai ,Union Minister ,DMK ,Salem ,Salem Kamalapuram Airport ,Bengaluru ,Hyderabad ,Kochi ,IndiGo ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...