×

அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

 ராமமூர்த்தி, விராலிமலை.

முழுமையாக கெட்ட நாட்களாக கருத முடியாது. புதிதாக துவங்கும் பணிகளை அஷ்டமி, நவமியில் செய்யக் கூடாது. மாறாக, அன்றாடம் செய்து கொண்டிருக்கும் பணிகளையும், ஏற்கெனவே துவக்கிய ஒரு பணியின் தொடர்ச்சியையும் அஷ்டமி, நவமி நாட்களில் செய்யலாம். இந்த இரண்டு நாட்களும் வளர்பிறை, தேய்பிறை என்று சொல்லப் படுகின்ற ஒரு பக்ஷத்தின் நடுபாகத்தில் வருபவை. வானவியல் ரீதியாக சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே இருக்கக் கூடிய தூரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதே இந்த இரண்டு நாட்களும் ஆகும். சந்திரனை நாம் மனோகாரகன் என்று அழைக்கிறோம். அஷ்டமி, நவமி திதிகளின் காலத்தில் சந்திரனால் முழுமையாக வெற்றியைத் தருகின்ற வகையில் செயல்பட முடியாது என்பதால், அதாவது நம்முடைய மனதில் முழுமையாக நேர்மறை எண்ணங்கள் உதிக்காது என்பதால், இந்த நாட்களில்
சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்தார்கள் நம்முன்னோர்கள்.

?வீட்டின் வடகிழக்கு மூலையில், கழிவறையோ குளியலறையோ கட்டக் கூடாது என்கிறார்களே, ஏன்?

– பேபிகலா, புதுச்சேரி.

ஈசான்ய மூலை என்று அழைக்கப் படும் வடகிழக்கு மூலையை, தெய்வீக மூலை என்று சொல்வார்கள். இந்த மூலையில் பூஜையறை அமைத்து வழிபடுவது நல்லது. தெய்வீக சாந்நித்யம் நிறைந்திருக்கும் பகுதி இந்த மூலை என்பதால், இந்த இடத்தில் கழிவறையோ குளியலறையோ கட்டக்கூடாது என்கிறார்கள்.

?வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் 3 மாதம் அடைப்பு உள்ளது என்று சுபகாரியங்களைத் தள்ளிப்போட வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவது பற்றி?

வி.ஸ்ரீ னிவாசராவ், மைசூர்.

மூன்று மாதம் அல்ல, ஆறு மாதம் வரைகூட அடைப்பு என்பது உண்டு. இதனை தனிஷ்டா பஞ்சமி என்று சொல்வார்கள். தனிஷ்டா என்பது அவிட்டம் நட்சத்திரத்தைக் குறிக்கும். அதிலிருந்து தொடர்ச்சியாக வரக்கூடிய 5 நட்சத்திரங்கள் அதாவது அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திர நாட்களில் இறந்தால் ஆறுமாத கால அடைப்பு என்றும் ரோகிணி நட்சத்திரம் என்றால் நான்கு மாத காலமும் கிருத்திகை, உத்திரம் ஆயின் மூன்று மாத காலமும் மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம் ஆயின் இரண்டு மாத காலமும் அடைப்பு என்று சொல்வார்கள். இந்த காலத்தில், இறந்தவர் வீட்டில் காலை மாலை இருவேளையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வேண்டும். அத்துடன் தனிஷ்டா பஞ்சமி பரிகாரமாக கரும காரியத்தினை நடத்தும் நாளில் வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விடுத்து தானம் செய்ய வேண்டும் என்றும் விதிகள் உண்டு. இந்த விதிகள் ஜோதிடத்தின் கீழ் வருபவை அல்ல. தர்மசாஸ்திரத்தின் கீழ் வருபவை.

?கிரகங்கள் வக்கிரமடைவது ஏன்?

– அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.

வக்கிரம் என்றால் ஏதோ கிரகங்கள் பின் நோக்கி செல்வதாக நினைக்கிறோம். எந்த கிரஹமும் பின்நோக்கி செல்லாது. முன்நோக்கிதான் சுற்றிக் கொண்டிருக்கும். இந்த அண்டத்தினை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்து வைத்திருக்கிறோம். கிரஹங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருப்பதாக பாடத்தில் படித்திருப்போம். ஓட்டப்பந்தய நிகழ்வினை தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதனை மனதில் நிறுத்தி கற்பனை செய்து பாருங்கள். நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் அமைப்பு நன்றாகப் புரியும். நீள்வட்டப்பாதை எனும்போது அதில் மையப் புள்ளியை விட்டு வெகுதொலைவில் உள்ள பகுதியில் பயணிக்கும்போது, அந்தப் பகுதியினை கடப்பதற்கு நேரம் என்பது கூடுதலாக ஆகும். அந்த நேரத்தில் நாம் வசிக்கும் பூமி நீள்வட்டப் பாதையில் மையப் புள்ளியில் இருந்து குறைவான தூரத்தில் பயணிக்கும்போது, சற்று நாம் வேகமாக முன்நோக்கி செல்வதுபோல் தோன்றும். இரு ரயில்கள் அருகருகே உள்ள இருப்புப் பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று வேகமாக முன்நோக்கி செல்லும்போது அந்த ரயிலில் பயணிப்பவர்களின் கண்களுக்கு அருகில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு ரயில் பின்நோக்கிச் செல்வது போலத் தெரிகிறது அல்லவா? அதே போல, நம் கண்களுக்கும் அந்த கிரகங்கள் பின் நோக்கி செல்வது போல காட்சி அளிக்கிறது. அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தினைத் தான் நாம் வக்ரகதி என்கிறோம். ஆனால், உண்மையில் எந்த கிரகமும் பின்நோக்கி செல்வதில்லை. வக்ர கதியில் உள்ள கிரகங்களுக்கான பலன் என்னவென்றால், அவர்களுக்கு உரிய பாவகங்கள் சற்று நிதானமாக வேலை செய்யும், அவ்வளவுதான். உதாரணத்திற்கு, ஒருவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10-ம் பாவக அதிபதி வக்ரம் பெற்றிருக்கிறார் என்று சொன்னால் இவருக்கு வேலை என்பது சற்று தாமதமாக கிடைக்கும், ஆனால் கிடைக்கின்ற வேலை என்பது நிரந்தரமாக இருக்கும். இப்படி அதன் உண்மையான பொருள் உணர்ந்து பலன் காண வேண்டும்.

?வாஸ்து பரிகாரங்கள் என்றால் என்ன?

– பொன்னுத்தாயி, திருநெல்வேலி.

வாஸ்து என்பது புவியியல் சார்ந்த அறிவியல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நீரோட்டம் என்பது எந்த பக்கம் இருக்கும், எந்த திசையில் இருந்து காற்று நன்றாக வரும், எந்த திசையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும், எந்த இடத்தில் அமர்ந்து உணவருந்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது போன்ற அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியதே வாஸ்து சாஸ்திரம். அதற்கேற்றவாறு நம் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதே போல, காலிமனையில் ஏதேனும் தோஷம் இருப்பதாக உணர்ந்தால், அதற்கு “வாஸ்து சாந்தி’’ என்ற பூஜையைச் செய்வார்கள். அந்த மனையைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எண்திசைப் பாலகர்களுக்கும் உரிய பூஜைகளைச் செய்து மத்தியில் பிரம்மஸ்தானத்தில் வாஸ்துபுருஷனுக்கு உரிய ஹவிர்பாகங்களைத் தந்து ஹோமம் செய்து வழிபடுவார்கள்.
இந்த பூஜையில் பூசணிக்காய், எலுமிச்சம்பழம் முதலியவற்றை பலியாகத் தருவார்கள். இதன் மூலம், அந்த மனையில் உள்ள வாஸ்துதோஷம் என்பது நீங்கி, அந்த இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தில் வசிப்போர் எந்தவிதமான குறையும் இன்றி வாழ்வார்கள் என்பது நமது நம்பிக்கையாக உள்ளது.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

 

The post அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா? appeared first on Dinakaran.

Tags : Ashtami ,Navami ,Ramamurthy ,Viralimalai ,Dinakaran ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு...