×

பொதுத்தேர்வுக்கு செல்லும்போது மாணவர்கள் நெரிசலில் சிக்கினால் எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம்: ஆவடி காவல் ஆணையர் தகவல்

அம்பத்தூர், மார்ச் 2: தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால், காவல் எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம். உடனடியாக நெரிசல் சரி செய்யப்படும், என ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறியுள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு தொப்பி, கண்ணாடி, நீர், மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் ஆணையர் சங்கர் கலந்துகொண்டு, போக்குவரத்து காவல் துறையினருக்கு தொப்பி, கண்ணாடியை அணிவித்து நீர், மோர் குளிர்பானங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளதால் ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்திற்கு செல்ல வசதியாக, ஏராளமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும்.தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கினால், காவல் உதவி எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம். உடனடியாக போக்குவரத்து சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் ஜெயலட்சுமி, அம்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள், தலைமை போக்குவரத்து காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பொதுத்தேர்வுக்கு செல்லும்போது மாணவர்கள் நெரிசலில் சிக்கினால் எண் 100ஐ தொடர்பு கொள்ளலாம்: ஆவடி காவல் ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Avadi Commissioner ,Ambattur ,Aavadi ,Police Commissioner ,Shankar ,Aavadi Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு