×

ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராகவும், மூத்த அமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட ஏழு பேர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த குற்றச்சாட்டில் போதிய ஆதாரம் இல்லை என்பதை அடிப்படையாக கொண்டு 2012ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி, வழக்கை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முடித்து வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.

தன் மீதான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்மறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹரிகிருஷ்ண ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘இந்த விவகாரத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்த பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிக்கிறார்.

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மாநிலத்தின் முதல்வராக முன்பு இருந்தவர். அதனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடவடிக்கை என்பது நீதிமன்ற முந்தைய உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே அவரது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். அதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டு எதையும் கூற விரும்பவில்லை. எனவே மேல்முறையீட்டு மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் தகுதியின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் என உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க எந்தவித தடையும் இல்லை’’ என்பது உறுதியாகியுள்ளது.

The post ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து குவிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Paneer Selva ,Supreme Court ,New Delhi ,Principal ,O. ,Paneer ,Wealth ,O. Paneer Selvam ,Vijayalakshmi ,Dinakaran ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...