×

கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அதிரடி போதைப்பொருளின் தாய்மடி குஜராத்

சென்னை: சென்னையில் திமுக வர்த்தக அணி தலைவரும், கவிஞருமான காசிமுத்து மாணிக்கம் கூறியதாவது: மழை என்றால் சிரபுஞ்சி, மலர் என்றால் மல்லிகை, விழி என்றால் ராஜ விழி, ஐதராபாத், செகந்திராபாத் என்றால் பிலிம் சிட்டி, ஜெய்ப்பூர் என்றால் பேலஸ் சிட்டி, மதுரை என்றால் டெம்பிள் சிட்டி, குஜராத் என்றாலோ போதை பொருள் கடத்தலின் தாய் தொட்டில். கசாப்புக்கடைக்காரன் காருண்யம் பேசுவதைப் போல போதைப் பொருளின் உச்சமாக இருக்கும் பாஜவினர் பேசுவது விந்தையாக உள்ளது. தான் திருடி பிறரை நம்ப மாட்டாள்.

இந்தியாவின் தூய்மையும், பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் துறைமுகம் வழியாக வரும் போதைப் பொருள்களை தடை செய்ய வேண்டும். ஜனாதிபதி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது. குறிப்பாக அதானி துறைமுகம் வழியாக கடத்தப்பட்ட போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத்துறையினர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் கூட பல ஆயிரம் கோடி மதிப்பு 2 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். ஒரு முறை, இரு முறை அல்ல பல முறை போதைப் பொருள் பிடிபட்டுள்ளது.

போதைப் பொருளை மட்டும் பிடிக்கும் ஒன்றிய அதிகாரிகள், ஏன் போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகளை பிடிக்கவில்லை. யார் அதில் உடந்தை. இது ஊருக்கே தெரியும். பிரதமர் மோடி, எந்த தொழில் அதிபருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதோ அந்த தொழிலதிபரின் துறைமுகத்தில்தான் அதிகமாக கடத்தப்படுகிறது. அதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பேன் என்று சொன்ன மோடி, பக்கோடா விற்கச் சொன்னார்.

ஆனால் இன்று குஜராத்தில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி மோடி பதில் பேசுகிறாரா? ஏன் பேச மறுக்கிறார்? போதைப் பொருளின் தாய்மடி குஜராத் மாநிலமும், அதன் கடற்கரை நகரங்களும்தான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். தேர்தல் நேரம் என்றாலே குண்டு வெடிக்கிறது. அதுவும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே வெடிக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே எடைபோட்டு பார்ப்பவர்கள். அவர்களின் பருப்பு, தமிழகத்தில் வேகாது என்றார்.

The post கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அதிரடி போதைப்பொருளின் தாய்மடி குஜராத் appeared first on Dinakaran.

Tags : Kasimuthu Manickam ,Gujarat ,Chennai ,DMK ,Raja Vili ,Hyderabad ,Secunderabad ,Film City ,Jaipur ,Palace City ,Madurai ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...