×

பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!

நன்றி குங்குமம் தோழி

புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்

தான் உண்டு தன்னோட வாழ்க்கை உண்டு என்று இருக்கும் மக்கள் மத்தியில் தன்னை ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த மக்களுக்காக தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார் புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன். திருவாரூரில் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். இங்குள்ள மக்களின் ஏழ்மை நிலையை கண்டு அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தன் சொந்த செலவில் கட்டுவது மட்டுமில்லாது, அவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு தங்களால் முடிந்த உதவிகளை தன் கணவருடன் இணைந்து செய்து வருகிறார்.

“என்னதான் அரசியல் குடும்பத்திலிருந்து நான் வந்தாலும், எனக்கும் அரசியல் புதுசாகத் தான் இருந்தது. உள்ளே வந்த பிறகு அரசியல் பற்றி கத்துக்கவே ஒரு வருடம் தேவைப்பட்டது’’ என பேச ஆரம்பித்தார் திவ்யா கணேசன். ‘‘என் அப்பா எங்க கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருந்தார். அவர் கிராம மக்களுக்கு செய்யும் சேவையை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னுடைய மனதில் எதிர்காலத்தில் அப்பாவைப் போல் நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பொறியியல் பட்டப்படிப்பு முடிச்சிட்டு சென்னையில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தேன். வீட்டில் திருமணம் பேச்சு வந்ததும், வேலையை ராஜினாமா செய்திட்டு கிராமத்துக்கே வந்துட்டேன். அந்த சமயத்தில்தான், ஊராட்சித் தலைவர் தேர்தலில் பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டது.

அதில் எங்களுடைய புதுக்குடி ஊராட்சியும் ஒன்று. அப்பாவிற்கு பதில் நாம ஏன் இந்த தேர்தலில் நிற்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. என் விருப்பத்ைத அப்பாவிடம் தெரிவித்தேன். அவரும் ஆதரவு தர ஊராட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். எனக்கு மக்கள் கொடுத்த ஆதரவில் எங்க கிராமத்தின் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2019ல் இந்த பதவியை ஏற்று இன்று வரை என்னுடைய பயணம் தொடர்ந்து வருகிறது.

என் கண்காணிப்பில் மொத்தம் ஐந்து குக்கிராமங்கள் உள்ளன. அதில் ஏழ்மையான குடும்பங்கள் தான் அதிகம். தலைவியாக அவர்களுக்காக ஏதாவது செய்யணும்னு யோசித்து செய்ததுதான் அவர்களின் வீட்டின் வரி மற்றும் தண்ணீர் வரிகளில் இருந்து விலக்கு கொடுப்பதாக தீர்மானம் அறிவித்தேன். தலைவரான பிறகு மக்களின் பிரச்னையில் மிகவும் முக்கியமாக நான் பார்த்ததில் வரியும் ஒன்றாக இருந்தது. வருடத்திற்கு ரூ.700 என்பது அவர்களுக்கு பெரிய தொகை.

தினசரி வாழ்வாதாரத்திற்ேக அவர்கள் போராடிக் கொண்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது வரி கட்டுவது என்பது அவர்களுக்கு மிகவும் சிரமமானது. இதை மாற்ற என்ன வழிகள் என்று கண்டறிந்தேன். வீட்டு வரி, தண்ணீர் வரி என்பது அரசுக்கு மக்கள் கொடுக்கக்கூடியது. அதை ரத்து செய்வது என்பது நம்மால் இயலாத காரியம். ஆனால் அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து, அவர்களின் வரியினை நானும் என் கணவரும் எங்களுடைய சொந்த பணத்தில் கட்டி வருகிறோம். இதற்கு என் குடும்பம் எனக்கு முழு ஆதரவு கொடுத்து வராங்க.

என் பொறுப்பில் இங்கிருக்கும் ஐந்து குக்கிராமங்களில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வராங்க. அதில் 10 குடும்பங்கள் இந்த வரி விலக்கால் பயன் அடைந்துள்ளனர். அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர்களின் குழந்தைகளை எங்க கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கணும் என்பதுதான். அவர்களும் என்னை நம்பி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தாங்க. அவர்களுக்கான வீடு மற்றும் தண்ணீர் வரிகளை முழுக்க முழுக்க நான் என்னுடைய பொறுப்பில் ஏற்றுக் கொண்டேன்.

எங்க கிராமத்தில் ஒரேயொரு அரசுப் பள்ளிதான் உள்ளது. அதுவும் எட்டாம் வகுப்பு வரை தான் செயல்பாட்டில் உள்ளது. கிராமத்திலிருந்து ஏழு கிமீ தொலையில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. எட்டாம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் அங்கு தான் படிக்க செல்ல வேண்டும். தற்போது இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் என பார்த்தால் மொத்தமாக 89 பேர் இருக்காங்க.

2021ல் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் கேன்வாஸ் செய்த அந்த சமயத்தில் தான் வரி விலக்கு பற்றி துண்டு பிரசுரத்தை ஒவ்வொரு வீடாக கொடுத்தோம், அரசுப் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்கும் என்று சொன்னோம். எங்கள் கேன்வாஸிற்கு பிறகு 14 குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்ந்தாங்க. மேலும் ஏற்கனவே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.

அடுத்த வருடம் மக்கள் பயன் அடையும் சில திட்டங்களை கொண்டு வரும் எண்ணம் உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது’’ என்றவரின் அரசியல் வாழ்க்கைக்கான வெற்றிக்கு அவரின்குடும்பத்தில் உள்ள அனைவரும் காரணம் என்று குறிப்பிட்டார்.

‘‘நான் அரசியலுக்கு வந்த போது, அது பற்றி எதுவுமே எனக்கு தெரியாது. கொஞ்ச கொஞ்சமாகத்தான் அதை எவ்வாறு செயல்படுத்தணும்னு புரிந்து கொண்டேன். ஊராட்சித்தலைவரான பிறகு தான் எனக்கு திருமணமானது. வரிவிலக்கு திட்டம் ஆரம்பித்த போது இது சாத்தியப்படுமா என்ற கவலை இருந்தது. ஆனால் மாணவர்கள் சேர்க்கையை பார்த்த பின் தான் எங்களது திட்டம் வெற்றி பெற்றது என புரிய ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து கிராமம் முழுக்க சிசிடிவி கேமரா பொருத்தி இருக்கேன். இதன் மூலம் கிராமத்தில் திருட்டு பயமும் நீங்கியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கென்று அதன் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட அளவு நிதி அரசு சார்பில் வழங்கப்படும்.

அந்த நிதியை பயன்படுத்தி எங்கள் கிராமத்திற்கு சாலை அமைத்திருக்கிறோம். அதேபோல் கிராமத்தில் 10 கழிவறைகள் கட்டுவதற்கான நிதியை கொடுப்பாங்க. ஆனால் நான் 25 கழிவறைகள் கட்ட இருக்கிறேன். குறிப்பாக பள்ளிகளில் கழிவறை அவசியம் என்ற என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதற்கான நிதியை அரசு அளித்தது. அதற்கான வேலைகளை இந்த மாத இறுதியில் துவங்க உள்ளோம். மேலும் பள்ளிகளில் மாணவிகளுக்கென தனி கழிவறை, புதிதாக சமையற்கூடம் என சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளோம்.

அரசு சார்பில் இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உள்ளது. அதையும் எங்க கிராம மக்களுக்காக வழங்கியுள்ளது அரசு. அவர்களுக்கு வீடு கட்ட நிதி கொடுப்பாங்க, இவர்கள்தான் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான போதிய வசதி இவர்களிடம் இருக்காது, என்பதால், என்னுடைய அடுத்தகட்ட திட்டம் கிராம மக்களுக்கு வீடு அமைத்து தருவதுதான். அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். ஒரு தலைவராக நான் இருக்கும் போது, இங்கு இருப்பவர்களுக்கு முறையான கழிவறை, வீடு மற்றும் மாணவர்களின் படிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரணும் என்பதுதான் என் எண்ணம்.

மேலும் இங்குள்ள அரசுப் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தணும். என்னுடைய பதவிக்காலம் இன்னும் ஒரு வருடம்தான், அதற்குள் இவை எல்லாம் நடந்தால் எனக்கு திருப்தியாக இருக்கும். நான் எங்க கிராமத்திற்காக செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து அப்பா என்னை பாராட்டுவார். அப்பாவுடைய வழியினை நான் பின்பற்றி வந்தாலும், எனக்கென மக்கள் மத்தியில் ஒரு தனிப்பட்ட இடம் கிடைத்திருப்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு’’ என்று சிரித்த முகத்துடன் பதிலளித்தார் திவ்யா கணேசன்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்! appeared first on Dinakaran.

Tags : Pudukudi ,Divya Ganesan ,panchayat ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை