கூடலூர்: கூடலூர் அருகே, வனப்பகுதிக்குள் சென்ற தோட்டக் காவலாளியை சுட்டுக்கொன்றது தொடர்பாக வனவர், வனக்காவலரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). தோட்ட காவலாளி. இவர், கடந்தாண்டு அக்.28ம் தேதி இரவு வனப்பகுதிக்குள் சென்றபோது, வனத்துறையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து லோயர்கேம்ப் காவல்நிலையத்தில் வனத்துறையினர் அளித்த புகாரில், ‘ஈஸ்வரன் வண்ணாத்திப்பாறை ரிசர்வ் வனப்பகுதிக்குள் முடநாரி புதுப்பாலம் அருகே வேட்டையாட முயன்றார். அப்போது ரோந்து வந்த வனத்துறையுடன் ஏற்பட்ட தகராறில் வனவர் திருமுருகன் துப்பாக்கியால் ஈஸ்வரனை சுட்டு கொன்றதாக தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஈஸ்வரனை சுட்டு கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், ஈஸ்வரனை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து, குற்றவாளிகள் வனவர் திருமுருகன், வனக்காவலர் பென்னி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில், ‘லோயர்கேம்ப் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வனவர் திருமுருகன், வனக்காவலர் பென்னி ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர்.
The post காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது appeared first on Dinakaran.