×

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.55 கோடி மோசடி: 2 பேர் கைது

சிவகாசி: வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.55 கோடி மோசடி செய்தது தொடர்பாக, நகை மதிப்பீட்டாளர், அடகு கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பஸ்நிலையம் அருகே, காந்தி ரோட்டில் தேசிய வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில், நெல்லை மண்டல மேலாளர் ரஞ்சித் நேற்று தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது நகை கடன் குறித்து ஆய்வு செய்தார். இதில், போலி நகைகளை அடகு வைத்து ரூ.கோடிக்கணக்கில் மோசடி நடந்ததை கண்டுபிடித்தார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், சிவலார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பாலசுந்தரம் (40) என்பவர், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கணக்குகளில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி டவுன் காவல்நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் கொடுத்தார். இதன்பேரில் டிஎஸ்பி தனஞ்செயன், வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று இரவு பாலசுந்தரத்தை கைது செய்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் முத்துமணி என்பவர் உதவியுடன் பாலசுந்தரம் மோசடியில் ஈடுபட்டதும், வங்கி அருகே அடகு கடை நடத்தி வந்ததும், 56 நபர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, 126 நகை கடன்கள் மூலம் 15,427 கிராம் சுமார் 2 கிலோ எடையுள்ள போலி நகைகளை அடகு வைத்து ரூ.7 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 509 பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து வங்கி நகை மதிப்பீட்டாளர் முத்துமணியை (35) போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர்.

The post வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.55 கோடி மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,National Bank ,Gandhi Road ,Sivakasi Bus Stand ,Virudhunagar District.… ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை