சென்னை : மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, சென்னையில் முழுமையாகவும், இதர 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணத் தொகை கடந்த டிசம்பரில் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கனமழை, புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு இல்லாதவர்களும் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நிவாரணம் கோரி 5.67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நிவாரணம் கோரியவர்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. முதற்கட்ட பட்டியலில் நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு முதலமைச்சர் பிறந்தநாளான இன்று அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
The post மிக்ஜாம் புயல் நிவாரணம் : 4 மாவட்டங்களில் தனியாக விண்ணப்பித்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.6000 வரவு வைக்கப்பட்டது!! appeared first on Dinakaran.