×

சேத்தியாத்தோப்பு அருகே

சேத்தியாத்தோப்பு, மார்ச் 1: வீராணம் ஏரியில் மெட்ரோ வாட்டருக்காக அமைத்துள்ள நீர் வாங்கி நெடு மாட பகுதியை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி கிராம பகுதியில் வீராணம் உள்ளது. இந்தாண்டு போதுமான மழை பொய்யாததால் ஜனவரி மாதம் முதல் இந்த ஏரியின் நீர்மட்டம் சரிந்தது. இங்கிருந்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நேரடியாகவும், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் மறைமுகமாகவும் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. 47.50 அடி அதிகபட்ச கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறண்டு கட்டாந்தரையாக மாறி வருகிறது.

இதனால் கோடை காலத்தில் இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலையில் உள்ளது. தற்போது மிகக்குறைந்த அளவே சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பூதங்குடி நீர் வாங்கி நெடு மாட பகுதியில் ஊழியர்கள் வேலி அமைத்து எஞ்சி இருக்கும் தண்ணீரை குப்பைகள் மற்றும் பாசிகள் அண்டாதவாறு மெட்ரோ வாட்டருக்கு உரிஞ்சப்படுவது குறித்து சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று திடீரென மெட்ரோ வாட்டர் உயரதிகாரிகள் நீர் வாங்கி நெடு மாட பகுதியையும், ஏரியையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாழ்வாரத்தை காத்து வந்த வீராணம் ஏரியில் தண்ணீர் வற்றியதால் பல இடங்களில் நவரை பட்ட நெல் நடவுக்கான போதுமான தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் ஏரியின் மூலம் மெட்ரோ வாட்டருக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால் கரைமேடு, வாலாஜா ஏரியின் அருகே உள்ள பகுதிகளில் போடப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்று அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

The post சேத்தியாத்தோப்பு அருகே appeared first on Dinakaran.

Tags : Chetiathoppu ,Chethiyathoppu ,Nedu Mata ,Veeranam Lake ,Veeranam ,Boothangudi ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி