×

தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச் சாவடிகளை உடனே மூட வேண்டும் என்று முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் டீசல், பெட்ரோல் மீது விற்பனை வரியை குறைக்க வேண்டும். புதுச்சேரி, கர்நாடகாவைப் போல விற்பனை வரி குறைத்தால் 7 லட்சம் லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்லும் சிறிய வாகனங்கள் பயன் பெறுவார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும். தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகள் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 26 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் நீக்க வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத்தில் இருந்து எம்சாண்ட், ஆற்றுமணல் உள்ளிட்ட பொருட்களை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் எங்கள் தொழில் அழிந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி பிரச்னையால் எங்களால் தொழில் நடத்த முடியவில்லை. அரசு கட்டுமானப் பணிகள், தனியார் குடியிருப்பு கட்டுமானம் போன்றவற்றுக்கு முழுமையாக மணல் கிடைப்பதில்லை. தற்போது ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 லோடு மணல் தருகிறார்கள். ஆனால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கட்டுமான தொழிலுக்கு மட்டும் 3 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள 90 மணல் குவாரிகளை விரைவில் இயக்க வேண்டும்.

The post தமிழ்நாட்டில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Chief Minister ,Tamil Nadu Sand Truck Owners Association ,President ,R. Muniratnam ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்