சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் மனு செய்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்து, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். இதை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் வழக்கறிஞர் கிங்ஸ்டன் ஜெரால்டு ஆஜராகி, அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அதை ஏற்ற நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மனு தள்ளுபடி உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
The post திரிஷா, குஷ்புவிடம் நஷ்ஈடு கேட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.