×

பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு உத்தரவு

சென்னை: பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு 1040 மில்லியன் லிட்டருக்கும் மேலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு கோடிக்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 2,071 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், 12 மாநகராட்சிகள், 65 நகராட்சிகள், 346 பேரூராட்சிகள் மற்றும் 52,361 ஊரக குடியிருப்புகளில் உள்ள மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகள் தங்களது சொந்த பராமரிப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சீரான குடிநீர் விநியோகத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

உரிய இடைவெளியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்வதை தினந்தோறும் அலுவலர்கள் நேரிடையாக ஆய்வு செய்து அறிக்கைகளை இயக்குநரகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை தொடர்ந்து முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்திட வேண்டும். பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வுமின்றி மேற்கொண்டு பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வண்ணம் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் பயன்பெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவினை வழங்கிட வேண்டும். சாலை விரிவாக்கப் பணிகள், மேம்பாலப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும்பொழுது சம்பந்தப்பட்ட துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி குழாய்களுக்கு சேதம் ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை தவிர்த்து பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள், நீராதாரங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

The post பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Nehru ,CHENNAI ,Minister ,KN Nehru ,Chennai Corporation ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...