புதுடெல்லி: 2024 காரீஃப் பருவத்தில் உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காரீஃப் பருவத்தில் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான நைட்ரஜன்(என்) மானியம் கிலோவுக்கு ரூ.47.02ஆகவும், பாஸ்பேட் டிக்(பி) ஒரு கிராமுக்கு ரூ.28.72ஆகவும், பொட்டாஷ்(கே) ஒரு கிலோவுக்கு ரூ.ரூ.2.38ஆகவும், கந்தகம்(எஸ்) ஒரு கிலோவுக்கு ரூ.1.89ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2023 ராபி பருவத்தில் கிலோவுக்கு ரூ.20.82ஆக இருந்த பாஸ்பேடிக் உரங்களுக்கான மானியம் 2024 காரீஃப் பருவத்தில் கிலோவுக்கு ரூ.28.72ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானியத்துடன் தற்போது ஒரு மூட்டைக்கு(50கிலோ) ரூ.1350க்கு விற்கப்படும் டி-அமோனியம் பாஸ்பேட்2024 காரீஃப் பருவத்தில் அதேவிலையில் தொடர்ந்து கிடைக்கும்” என்று கூறினார்.
ஒன்றிய அரசின் ‘பிரதமரின் சூர்யா கர் – முஃப்தி பிஜிலி யோஜனா’ திட்டத்தின்கீழ், ரூ.75,021 கோடி செலவில் 1 கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புலிகள் உள்ளிட்ட விலங்குகளை காக்க சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ரூ.1.26 லட்சம் கோடி முதலீட்டில் குஜராத், அசாமில் 3 செமி கண்டக்டர் ஆலைகளை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த 100 நாட்களில் தொடங்கும் . பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டாங்க்ஸ்டன், டைட்டானியம், வனாடியம் ஆகிய 12 முக்கிய கனிமங்களுக்கான ராயல்டிக்கான எம்எம்டிஆர் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The post உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.