×

2வது இன்னிங்சில் போராடுகிறது ஆப்கான்

அபுதாபி: அயர்லாந்து அணியுடனான டெஸ்டில் (ஒரே போட்டி), ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து போராடி வருகிறது. டாலரன்ஸ் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 155 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் இப்ராகிம் ஸத்ரன் 53 ரன், கேப்டன் ஹஷ்மதுல்லா 20 ரன், கரிம் ஜனத் 41* ரன் எடுத்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்திருந்தது.

ஹாரி டெக்டர் 32 ரன், பால் ஸ்டர்லிங் 2 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். டெக்டர் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த லோர்கன் டக்கர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஸ்டர்லிங் அரை சதம் அடித்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தனர். ஸ்டர்லிங் 52 ரன், டக்கர் 46, மெக்பிரைன் 38, மார்க் அடேர் 15, மெக்கார்தி 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, அயர்லாந்து முதல் இன்னிங்சில் 263 ரன் குவித்து ஆல் அவுட்டானது (83.4 ஓவர்).

ஆப்கான் பந்துவீச்சில் ஜியா உர் ரகுமான் 5, நவீத் ஸத்ரன் 3, நிஜத், ஜாகிர் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 108 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கான், 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்துள்ளது (37 ஓவர்). இப்ராகிம் ஸத்ரன் 12, ரகமத் ஷா 9, நூர் அலி ஸத்ரன் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹஷ்மதுல்லா 53 ரன், ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, 26 ரன் முன்னிலையுடன் ஆப்கான் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post 2வது இன்னிங்சில் போராடுகிறது ஆப்கான் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Abu Dhabi ,Ireland ,Tolerance Oval ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!