×

சிவ ஜெயந்தி, முருக ஜெயந்தி என்பது மட்டும் இல்லையே! இதற்கான அடிப்படை என்ன?

ஆர்.ஜே. கல்யாணி, நெல்லை

சிவனையும் முருகனையும் தவிர, எல்லாத் தெய்வங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் யாருக்காவது குழந்தையாக வந்து அவதரித்து இருக்கின்றன. சிவனும் முருகனும் அவ்வாறு வந்து, யாருக்கும் குழந்தையாக அவதரித்தது இல்லை. அதுதான் காரணம்.

நாமாவளி, பாராயணம் இவற்றின் பொருள் மற்றும் வேறுபாடு குறித்து விளக்கம் வேண்டுகிறேன்.

– ப.த.தங்கவேலு; பண்ருட்டி.

ஆவளி என்பதற்கு வரிசை என்று பொருள். தெய்வத் திருநாமங்களை ஒருவரோ அல்லது பலரோ, வரிசையுடன் பக்க வாத்தியங்களுடன் இசையுடன் சொல்வது-நாமாவளி. பாராயணம்-ஏதாவது ஒரு நூலை முழுமையாகவோ அல்லது பகுதி பகுதியாகவோ, ஏதேனும் ஒரு வேண்டுகோள் நிறைவேறுவதற்காக-பிரார்த்தனை பலிப்பதற்காகப் படிப்பது ‘பாராயணம்’.

பிள்ளையாருக்குப் பிரதானமாக அறுகம்புல்லைப் பயன்படுத்துவது ஏன்?

– ஆர்.கே.லிங்கேசன். மேலகிருஷ்ணன்புதூர்.

மிகவும் விரிவான இத்தகவலை ‘பார்கவ புராணம், முத்கல புராணம்’ ஆகிய நூல்கள் சொல்கின்றன.சுருக்கமாகப் பார்க்கலாம்! யமனுடைய பிள்ளையான அனலாசுரன் என்பவன், தான் வாங்கிய வர பலத்தால்;யாரும் அறியாமல் அவரவர் உடலுக்குள் புகுந்து அவர்களின் சக்தியை அப்படியே உருக்கி, அவர்களை அழித்து விடுவான். அவன் கொடுமை தாங்காத அடியார்கள், ஆனைமுகனிடம் முறையிட அனலாசுரனைத் துதிக்கையால் தூக்கி, அப்படியே விழுங்கி விட்டார் அவர். அதே விநாடியில் ஆனைமுகனின் திருமேனி கொதிக்க, அகில உலகமும் கொதித்தது. சந்திரன் தன் அமுத மயமான கதிர்களை விநாயகர் மீது வீச; தேவர்கள் காமதேனுவின் பாலை எடுத்து ஊற்ற; பாம்புகள் குளிர்ச்சி என்பதால் முனிவர்கள் பாம்புகளை எடுத்துச்சுற்ற… என்ன செய்தும் பிள்ளையாரின் திருமேனி கொதிப்பு அடங்க வில்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், கௌதமர், காசியபர், ஆங்கிரசர் எனும் சப்த(ஏழு)ரிஷிகளும் வந்து, ஒரு சாண் அளவுள்ள 21-அறுகம்புற்களை, ஒவ்வொருவரும் விநாயகர் திருமேனியில் சாற்றினார்கள். அப்போதே விநாயகர் திருமேனி குளிர, உலகமே கொதிப்படங்கிக் குளிர்ந்தது. அதைக் கண்டு அனைவரும் வியக்க, ‘‘அறுகே நமக்கு உகப்பு’’ என்றார் விநாயகர். அன்று முதல் விநாயகருக்கு ‘அனலப் பிரசமனர்’ எனும் திருநாமம் உண்டானது. அறுகம்புல் பிள்ளையாருக்கு உகந்தது ஏன் என்பதை விளக்கும் கதை இது. இதன் அடிப்படை உண்மை: அறுகம்புல் உடலின் வெப்ப-தட்ப நிலைகளைச் சீராக்கி, உடலை ஆரோக்கியமாக வைக்கக் கூடியது – அறுகம்புல். இதன் காரணமாகவே அறுகம்புல் கஷாயம், அறுகம்புல் ஜூஸ் ஆகியவை புழக்கத்தில் உள்ளன.

அருள்ஜோதி

The post சிவ ஜெயந்தி, முருக ஜெயந்தி என்பது மட்டும் இல்லையே! இதற்கான அடிப்படை என்ன? appeared first on Dinakaran.

Tags : Shiva Jayanti ,Muruga Jayanti ,RJ ,Kalyani ,Nella ,Shiva ,Muruga ,Murugan ,Namavali ,Parayanam ,
× RELATED பட்டத்தால் எனக்கு பயம்: ஆர்ஜே பாலாஜி அலறல்