×

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை

திருச்சி, பிப்.29: திருச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அலுவகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரையில் உள்ள மாவட்ட முதன்மை அலுவலர் கல்வி அலுவலகம் முன் கடந்த 26, 27ம் தேதிகளில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (28ம் தேதி 3வது நாளாக முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில், செயலாளர் நவீன்குமார், பொருளாளர் ராஜ்குமார், துணைத்தலைவர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் திடீரென சிஇஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் 200 ஆசிரியர்களை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

The post திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Principal Education Officer ,Secondary Registration Senior Teachers Movement ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்