×

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்

அரியலூர், பிப். 29: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், குழுத் துணைத்தலைவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன் மற்றும் குழு உறுப்பினர், முதன்மை நடுவர் அறிவு ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடந்த காலாண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைகள் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பெறுவதற்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நேய சிறப்பு பிரிவு ஏற்படுத்திடவும், பள்ளிகள் ஆரம்ப நேரம் மற்றும் முடிவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்துப் பணியினை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பேசுகையில், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கோ அல்லது 21 வயதிற்குட்பட்ட ஆணுக்கோ திருமணம் செய்தால் குழந்தை திருமணமாக கருதப்படும். இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் 1098 என்ற குழந்தை உதவி எண்ணை தொடர்பு கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், தாய், தந்தை மற்றும் தந்தையை இழந்தை குழந்தைகள், சிறை சென்றவர்களின் குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 நிதி ஆதரவு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகி பயனடையலாம். பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் இருப்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகி குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயிலலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் லெட்சுமணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன், குழந்தைகள் நல குழுத்தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Collector ,District Child Protection Unit ,Child Protection Committee ,Anne Mary Swarna ,Vice ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...