×

உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறதா? சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு

நாகப்பட்டினம், பிப்.29: நாகூரில் உள்ள மளிகை கடையில் குடும்ப தேவைக்காக வாங்கப்பட்ட சீனியில் அஜினோமோட்டோ கலந்து இருப்பதாகவும் அரிசியில் புழுக்கள் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அலுவலர் வாயிலாக நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த மளிகை கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது புகாரில் குறிப்பிட்ட மளிகை கடையில் புகார்தாரர் குறிப்பிட்ட அரிசி இல்லை. விற்பனைக்கு இருந்த மற்ற அரிசிகளில் புழுக்கள் ஏதும் தென்படவில்லை. சீனியும் நன்றாகவே இருந்தது. மேலும் சீனியுடன் அஜீனோமோட்டோ கலப்படம் செய்து விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த இரண்டு தகவல்களும் புகார்தாரருக்கு தெளிவு படுத்தப்பட்டது. ஏனெனில் விலை அதிகமாக உள்ள உணவு பொருளுடன் விலை மலிவான பொருட்களை கலந்து விற்பனை செய்வதே லாபம் தருவதாகும். இங்கு சீனி விலை குறைவு, அஜீனோமோட்டோ விலை அதிகம்.

எனவே சீனியுடன் அஜீனோமோட்டோ கலந்து விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை. உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் புகார் எண்ணில் தெரிவிக்கவும். புகார்தாரர் ரகசியம் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டது.

The post உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறதா? சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapatnam ,Ajinomoto ,Nagor ,Nagapattinam Municipal ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...