×

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் சோதனை வெற்றி: 9 மடங்கு செலவு குறையும் என இஸ்ரோ தலைவர் தகவல்

உடன்குடி: வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதன் முதலாக ரோகிணி ஆர்எச் 200 சிறிய ரக ராக்கெட்டை விஞ்ஞானிகள் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மணப்பாடு கிழக்கு கடற்கரையை ஒட்டிய கூடல்நகரை சுற்றி 2292 ஏக்கர் பரப்பளவில் ₹985.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். புவியின் வெப்ப நிலையை அறிந்து கொள்ளவும், காற்றின் தன்மையை கணக்கிடும் வகையில் குலசேகரப்பட்டினம் இஸ்ரோ வளாகத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.30 முதல் மதியம் 2 மணிக்குள் ரோகிணி ஆர்எச் 200 ரக சிறிய ராக்கெட் ஏவப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. சோதனை முயற்சியாக சுமார் 75 கி.மீ உயரம் செல்லக்கூடிய வகையில் 4 அடி உயரம், 40 கிலோ எடையுடன் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட்டை இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆய்வு செய்தார்.

பின்னர் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ரோகிணி ஆர்எச் 200 ரக சிறிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் 75.24 கி.மீ உயரம் சென்று 121.42 கி.மீ தூரத்தில் கடலில் விழுந்தது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்ததையடுத்து இஸ்ரோ ஏவுதள வளாகத்தில் நடந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது: ஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் ராக்கெட்டை செலுத்த 10ல் ஒரு பங்கு செலவே ஆகும். பொருளாதாரம், நேரம் மற்றும் எரிபொருள் பெரும் சேமிப்பாகிறது. இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரன்பட்டினம் உள்ளது. இங்கிருந்து விண்ணிற்கு ராக்கெட்டை செலுத்துவது மிக சுலபம். ₹1000 கோடிக்குள் பணிகள் முடியும் என நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து முதல் முயற்சியாக ரோகிணி ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு மிகுந்த பெருமை சேர்ப்பதாகும். பல்வேறு நாடுகளின் செயற்கைகோள்களை இங்கிருந்து விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளதால் நாட்டிற்கு அன்னிய செலாவணி பெருமளவில் கிடைக்கும்.

ஒரு வருடத்தில் இத்தளம் மூலமாக 24 ராக்கெட்களை ஏவ முடியும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் சோதனை வெற்றி: 9 மடங்கு செலவு குறையும் என இஸ்ரோ தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpatnam ,ISRO ,Udengudi ,Kulasekaranpattinam ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...