×

பணிப்பெண்கள் எவ்வளவோகூறியும் அடம் விமானத்தில் ரவுண்ட் ரவுண்டா புகை விட்ட சிங்கப்பூர் பயணி: போலீசில் ஒப்படைப்பு

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் நடுவானில் பறந்துவந்தபோது புகைபிடித்த சிங்கப்பூர் பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த சுதர்சன் (36) என்ற பயணி, திடீரென விமானத்திற்குள் புகை பிடிக்க தொடங்கினார்.

சக பயணிகள் ஆட்சேபனை தெரிவித்ததால், அவர் கழிவறைக்குள் சென்று, அவ்வப்போது புகை பிடித்துக்கொண்டு வந்தார். இது விமான பணிப்பெண்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் சுதர்சனை கண்டித்தனர். பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி, யாரும் புகை பிடிக்கக் கூடாது. இது 182 பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று அறிவுரை கூறினர். ஆனாலும் அந்த பயணி கழிவறைக்கு, அவ்வப்போது சென்று புகை பிடிப்பதை நிறுத்தவில்லை. இதையடுத்து பணிப்பெண்கள், தலைமை விமானியிடம் புகார் செய்தனர். உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் விமானம் நள்ளிரவு 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்திற்குள் ஏறி, சட்ட விதிமுறைகளுக்கு எதிராக புகை பிடித்த சிங்கப்பூர் பயணியை பிடித்து குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை முடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை எடுத்துள்ளார் என்பதும், இப்போது சென்னையில் உள்ள நண்பரை பார்க்க சுற்றுலா விசாவில், சென்னை வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post பணிப்பெண்கள் எவ்வளவோகூறியும் அடம் விமானத்தில் ரவுண்ட் ரவுண்டா புகை விட்ட சிங்கப்பூர் பயணி: போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Singapore ,Air India ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...