×

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டினை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், காஞ்சிபுரம் மாவட்டம், கரசங்கால், ஓவல் கிரிக்கெட் மைதானத்தில், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம்”காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மண்டல மாநாட்டினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி உயர்வு ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், காஞ்சிபுரம் மாவட்டம், கரசங்கால் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (28.02.2024) பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம்” காஞ்சிபுரம். சென்னை. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர். வேலூர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மண்டல மாநாட்டினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி உயர்வு ஆணைகளை வழங்கினார்.

* மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பற்பல புதுமையான திட்டங்களில் மிகச் சிறப்பான ஒரு திட்டம்தான் இந்த பெற்றோரை கொண்டாடுவோம் எனும் பெருமைமிகு திட்டம். பள்ளிக்கல்வித்துறையும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து மாணவர்கள். ஆசிரியர்கள் மேம்பாட்டுக்காக நடத்தும் பெற்றோரைக் கொண்டாடுவோம் என்னும் இந்நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெறுவது பெருமைக்குரிய நிகழ்வாகும். இந்நிகழ்வில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட மாணவர்களின் பெற்றோர்களும் பங்கு பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை பாராட்டுகிறேன்.

மதுரை, திருச்சி, தர்மபுரி, கோவை ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் சுமார் 1.50 இலட்சம் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 35,000 பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு ரூ.668 கோடி இத்துறைக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.2501 கோடி நன்கொடை
அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி என்பது அரசு மட்டுமில்லாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டால்தான் உயர்ந்த நிலையினை அடைய முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுதான் காஞ்சிபுரம் மண்டல மாநாடு ஆகும். பேரறிஞர் அண்ணா பிறந்த இம்மண்ணில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எவ்வளவு மாநாடு நடந்தாலும் கல்விக்காக நடத்தும் இம்மாநாடு போற்றுதலுக்குரியது. பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சீர் செய்வார்கள் ஆனால் இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சீர் செய்துள்ளார்கள். பள்ளிகள்தான் நம்மை உருவாக்குகின்றன. பள்ளிகளை சீர்படுத்த பேராசிரியர் திரு.அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடி கல்வி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் ரூ.2500 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.44.042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் பெண் பிள்ளைகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/-வழங்கப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் ரூ.2.72 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 17 இலட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இதனால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளது. இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், அனைவருக்கும் ஐஐடி, வானவில் மன்றம், போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

பெற்றோர்கள் தங்களது ஆசைகளையும், கனவுகளையும் மனதில் புதைத்துக்கொண்டு தமது குழந்தைகளின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றவும், அவர்களுக்கு மிகச் சிறந்த கல்வியை தர நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் பாராட்டி அவர்களை கொண்டாடுவது ஆகச் சிறந்த செயலாகும். மாணவர்களின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு திட்டமிடலும், பள்ளியின் மேம்பாட்டிற்காக அரசு எடுக்கும் புது முயற்சிகளுக்கு பெற்றோர்களும் கை கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை படைக்க எண்ணும் நோக்கம் நிறைவேற அனைவரும் பாடுபடுவோம் எனவும், உங்கள் குழந்தைகளின் உயர்வான எதிர்காலத்திற்கு உயர்கல்வி அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள்
தெரிவித்தார்.

* பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையுரையில் தெரிவித்ததாவது:

தந்தை பெரியார் அவர்கள் சொன்னது போல் எல்லோருக்கும் கல்வி அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதை இன்று நிரூபித்து கொண்டு இருக்கிறோம். பேரறிஞர் அண்ணா சொன்னது போல் நாம் நேர்மையாக நடைபோட வேண்டும் என்றால் நமக்கு துணையாக வருவது கல்வி மட்டும்தான் ஆகவே கல்வி அறிவு முக்கியமானது என்று சொன்னார்கள். இன்று சீர் சுமந்து கொண்டு வந்த போது அறிவாயுதமாக இருக்கும் புத்தகத்தை நானும், பிள்ளைகளுடைய ஆற்றலாக இருக்க கூடிய விளையாட்டு பொருட்களை மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் அவர்களும் மாணவர்களை சீர்படுத்த இந்த சீர் வரிசை எடுத்து வந்தோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னது போல் கல்வி மட்டுமே சமத்துவம் மலர செய்யும் மிகப் பெரிய ஆயுதம் என்று சொன்னார்.

இன்று அதையும் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்ததுபோல் படிக்காத மேதை ஒருவரை காட்டுங்கள் என்று சொன்னால் படித்த இலட்சம் பேரை காட்டுவோம் என்று சொல்வோம் என்று சொல்லி கல்வியும் சுகாதாரத்தையும் தன் இரு கண்களாக வெறும் வார்த்தைகளாக மட்டுமல்ல சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ரூ.44 ஆயிரத்து 42 கோடி நம்முடைய பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளார். 2021 முதல் தற்போது வரை சுமார் ரூ. 1 இலட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி உயர்வு ஆணைகளையும், அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய 125 நன்கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், கேடயங்களும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் ஜெ.குமரகுருபரன், பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் சு.நாகராஜ முருகன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர்கள் வி.முத்துக்குமார் மற்றும் என்.கே.ஆர்.சூரியகுமார், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள். ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் “பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டினை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Let's Celebrate Parents Conference ,Tamil Nadu State Parent Teacher Association ,Kanchipuram ,Chief Minister ,Tamil ,Nadu ,Kanchipuram District ,Karasangal ,Oval Cricket Ground ,School Education Department ,Chennai ,Chengalpattu ,Ranipetta ,Thiruvallur ,Vellore ,Celebrate Parents Conference ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...