×

டெல்லி போராட்டத்தில் அடக்குமுறையை கண்டித்து நெல்லை வரும் பிரதமருக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் எதிர்ப்பு

*குறை தீர்க்கும் கூட்டத்தில் வெளிப்படுத்தினர்

நெல்லை : டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து, நெல்லையில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து நெல்லை வரும் பிரதமருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கருப்புக் பேட்ஜ்அணிந்து பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார், ‘‘விவசாயிகள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஒன்றிய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமெடுப்பதில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும் விவசாயிகளை அழைத்து ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்தும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் நெல்லை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் வந்துள்ளோம்.’’ என்றார்.

பின்னர் பெரும்படையார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ஒடுக்கும் வகையில் சாலைகளில் ஆணியடித்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் என விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு ஒடுக்குகிறது. எனவே நெல்லைக்கு இன்று வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் அனைவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் அணி திரள்வோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம்’’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், வனத்துறை அம்பை துணை இயக்குநர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் முருகானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், தோட்டக் கலை துணை இயக்குநர் இளங்கோ மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தேர்தலை புறக்கணிப்போம்

கூட்டத்தில் கானார்பட்டி ஆபிரகாம் மற்றும் விவசாயிகள் பேசுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தின் விளை நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து நாசம் செய்து வருகின்றன. திருக்குறுங்குடியில் 3 ஏக்கர் வாழை பயிர் செய்ததில் 2 ஏக்கரை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விட்டன. வாழைக்கு 50 பைசா மட்டுமே நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. ஆனால் திருக்குறுங்குடியில் 5 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்த விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மானூர் பகுதியிலும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை நாசம் செய்கின்றன. எனவே பயிர்களை சீரழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற பாராளுமன்ற தேர்தலை விவசாயிகள் அனைவரும் புறக்கணிப்போம் .’’ என்றார். இதற்கு பதிலளித்த கலெக்டர், இது தொடர்பாக அரசு விரைவில் நல்ல முடிவெடுக்கும். ஓட்டுப் போடுவது உங்கள் ஜனநாயக உரிமை. அதைப் புறக்கணிக்கக் கூடாது. காட்டுப்பன்றி விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும்.’’ என்றார்.

கோதையாறு அதிகாரிக்கு கலெக்டர் டோஸ்

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், ‘‘கன மழை பெய்த போதிலும் ராதாபுரம் கால்வாயில் பல குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த கோதையாறு கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரி, வருகிற 29ம் தேதி கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படும் என்றார். அந்த அதிகாரிக்கு டோஸ் விட்ட கலெக்டர், கனமழை பெய்த போதிலும் ராதாபுரம் கால்வாயில் பல குளங்கள் நிரம்பவில்லை. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் இது தொடர்பாக புகார் வருகிறது. விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள். அடுத்த கூட்டத்தில் இதுபோன்ற புகார்கள் வரக் கூடாது’’ என எச்சரித்தார்.

The post டெல்லி போராட்டத்தில் அடக்குமுறையை கண்டித்து நெல்லை வரும் பிரதமருக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Grievance Redressal Day ,Nellie ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...