×

பிஎம் கிசான் நிதி சிக்கலுக்கு விரைவில் தீர்வு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தும்

*கோட்ட அளவில் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும்

*குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தேன்மொழி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம்:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பல தவணைகளாக உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிதியை பெற்றுத்தர வேண்டும்.

யூடிஆர் திருத்தம் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்க வேண்டும். சொட்டுநீர் பாசனம், மாட்டுக்கொட்டகை அமைத்துத் தர வேண்டும். தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் சாகுபடி, பழ வகை சாகுபடி செய்ய தேவையான உதவிகள் செய்ய வேண்டும். தரமான விதைகள் மற்றும் செடிகளை வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்க வேண்டும். தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் நெல் மகசூல் பாதித்திருக்கிறது. எனவே, நெற்பயிரில் ஏற்படும் நோய் தாக்குதலை கண்டறிந்து, தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் 1,57288 ஹெக்டர், சிறுதானியங்கள் 11,722 ஹெக்டர், பயறுவகைகள் 36,672 ஹெக்டர், எண்ணெய்வித்துக்கள் 60,558 ஹெக்டரில் பயிரிடப்பட்டுள்ளது.

வேளாண் கிடங்குகளில் 45.59 மெட்ரிக் டன், சிறுதானியம் 2431 மெட்ரிக் டன், பயறு வகைகள் 11.68 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார். மேலும், தேவையான உரம் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.கூட்டத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது: விவசாயிகளை நம்பித்தான் உலகம் இயங்குகிறது. விவசாயத்தின் தேவையையும், உணவு பொருட்களின் தேவையையும் கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்தனர். எனவே, விவசாயிகளின் நலனுக்கு எப்போதும் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளிக்கும். எந்த நேரத்திலும் என்னிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைளை தெரிவிக்கலாம். நிச்சயம் அதற்கு தீர்வு காணப்படும்.

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க விரைவில் சிறப்பு குறைதீர்வு முகாம் ஏற்பாடு செய்யப்படும். அதில், தங்களுடைய கோரிக்கைளை தெரிவித்து தீர்வு பெறலாம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு வாரமும் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடத்துவதை தவிர்த்து, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தாலுகாவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன்.

அதனால், அவர்களுக்கான பயண சிரமம் குறையும். மேலும், மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாதந்தோறும் நடப்பதை போல, வருவாய் கோட்ட அளவில் ஆர்டிஓ தலைமையில் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு கிைடக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேப்பர் கப்களில் தேநீருக்கு தடை

குறைதீர்வு கூட்டத்தை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன், திருக்குறள் சொல்லி தொடங்கியது வரவேற்பை பெற்றது. மேலும், கூட்டத்தில் பேசிய கலெக்டர், ‘இனி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களை கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்படும். வேளாண் துறை சார்பில் சான்று பெற்ற விதைகள் காட்சிப்படுத்தப்படும்’ என்றார். மேலும், கூட்டத்தில் விவசாயிகளுக்கு பேப்பர் கப் மூலம் தேநீர் வழங்கப்பட்டதை மாற்றி, இனிவரும் கூட்டங்களில் எவர்சில்வர் டம்ளர்களில் தேநீர் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.

The post பிஎம் கிசான் நிதி சிக்கலுக்கு விரைவில் தீர்வு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தும் appeared first on Dinakaran.

Tags : PM ,Kisan ,Thiruvannamalai ,Tiruvannamalai Collector ,Collector ,Bhaskara Pandian ,Harakumar ,BM Kisan ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!