*விவசாயிகள் எதிர்பார்ப்பு
சேத்தியாத்தோப்பு : நீர் வரத்து குறைந்ததால் வறண்டு கிடக்கும் வீராணம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி வரலாற்று சிறப்புமிக்கது. சோழர்களால் உருவாக்கப்பட்ட ஏரியாகும். இந்த ஆண்டு போதுமான மழை பொழியாததால் ஜனவரி மாதம் முதல் நீர்மட்டம் கிடுகிடு என சரிந்தது. ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நேரடியாகவும், ஒரு லட்சம் ஏக்கருக்கு மறைமுகமாகவும் பாசனத்திற்கு தண்ணீர் தந்து வருகிறது. 47.50 அடி அதிகபட்ச கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போதைய நிலை வேதனையையும், கண்ணீரையும் தந்து வருகிறது.
பல சிறப்புகள் கொண்ட ஏரிக்கு நீர்வரத்து பல மாதங்களுக்கு முன்பே நின்றுபோனதால் தற்போது வறண்டு கட்டாந்தரையாக மாறிவிட்டது. வீராணம் ஏரி கோடை காலத்தில் அதனுடைய நீர்மட்டத்தை இழந்துள்ளது. இதனால் சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பூதங்குடி பகுதியில் நீர் வாங்கி நெடு மாடத்தின் அருகே வேலி அமைத்து தரை தட்டி எஞ்சி நிற்கும் தண்ணீரை குப்பைகள் மற்றும் பாசிகள் செல்லாதவாறு மெட்ரோ வாட்டருக்காக உரிஞ்சப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களின் வாழ்வாரத்தை காத்து வந்த வீராணம் ஏரி தண்ணீர் வற்றியதால் நத்தமலை பகுதியில் எரிக்குள்ளே இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட பலரும் ஏரி இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. பல இடங்களில் நவரை பட்ட நெல் நடவுக்கான போதுமான தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. கோடை நாட்களை பயன்படுத்தி உடனடியாக தூர்வாரி சீரமைத்து வருடத்தின் எல்லா நாட்களிலும் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post நீர் வரத்து குறைந்ததால் வறண்டு கிடக்கிறது வீராணம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.