×

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள்

*மராமத்து பணிகள் விறுவிறுப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு உப்பளங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான மராமத்து பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் மற்றும் மாரியூர், மூக்கையூர், திருப்புல்லாணி, ஆனைக்குடி, கீழகாஞ்சிரங்குடி, கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, பனைக்குளம், நரிப்பாலம், தேவிப்பட்டினம், சம்பை, முத்துரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் 100க்கும் மேற்பட்ட உப்பு நிறுவனங்களின் உப்பளங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உப்பள பாத்திகளில் கடல்நீர் பாய்ச்சப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படும். மாவட்டத்தில் செப்டம்பர் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு உற்பத்தி நன்றாக இருக்கும். ஒரு சீசனுக்கு 2.5 லட்சம் டன் முதல் 3 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி கடைசி முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். இதனால், கடல் உவர்ப்பு நீரில் உப்பு உற்பத்திக்கு தேவையான வெப்பநிலை வந்தவுடன் உப்பளங்களில் கடல்நீர் பாய்ச்சப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தற்போது மாவட்டத்திலுள்ள அனைத்து உப்பளங்களில் பழைய கழிவுநீர், உப்பள பழைய வடுகளை அகற்றுதல், வரப்பு மற்றும் பாத்தி கட்டுதல், கடல்நீர், கழிவுநீர் செல்லும் வாய்க்கால் மராமத்து உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இது குறித்து உப்பள நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா கடல் உவர்ப்புநீரில் உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வெப்பநிலை இயற்கையாகவே இருக்கும். மார்ச் முதல் வாரத்தில் உப்பளத்திற்கு பாய்ச்சப்படும் கடல்நீரின் அடர்த்தி, வெப்பநிலை பரிசோதிக்கப்படும். பெரும்பாலும் உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி, வெப்பநிலை கிடைக்கும். இதையடுத்து, உப்பு உற்பத்தி பணி துவக்கப்படும்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்து உப்பளங்களிலும் நடந்து வருகின்றன. அடுத்த 4 மாதத்திற்கு உப்பு விளைச்சல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். உப்பு உற்பத்தி முதல் விற்பனைக்கு அனுப்புவது வரை தொடர்ந்து 6 மாத காலத்திற்கு உப்பள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’’ என்றனர்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Valinokkam ,Mariyur ,Mookaiyur ,Tirupullani ,Anaikudi ,Keezakanjirangudi ,Kopperimadam ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்