*பொதுமக்கள் மகிழ்ச்சி
மானாமதுரை : கொரோனா காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில்கட்டணம் திடீரென்று குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மற்றும்
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், கூலி தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் அருகிலுள்ள நகரங்கள் முதல் தொலைதூர நகரங்கள் வரை பயணிக்க ரயில்களை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் பேருந்துகளை விட குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தங்களின் நிதிச் சுமையை பெரிதும் குறைக்க உதவி செய்கிறது.
ஒன்றிய அரசு 2014 ல் ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் இருந்து பல்வேறு பெயர்களில் ரயில்பயண கட்டணங்களைசிறிது சிறிதாக உயர்த்தி வந்தது. 2021 ல் கொரோனா கால கட்டத்தில் வழக்கமான ரயில்களில் பயணிகள் ரயில்கள், மெமு மற்றும் டெமு ரயில்கள் ஆகியவை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் பாதிப்படைந்த பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த ரயில்கள் வழக்கம்போல அனைத்து நிலையங்களிலும் நின்று சென்றதால் பயண நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. டிக்கெட் கட்டணம் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் தினசரி பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு சுமையாக மாறியது .டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட் வாங்கும் போது கட்டண உயர்வை கேட்டு அதிர்ச்சி அடைந்து ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தது.
பலரும் கலக்கத்துடன் டிக்கெட் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தனர். பயணிகள் ரயில் கட்டண உயர்வு பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பலத்த சரிவை ஏற்படுத்தும் என்பதால் கடந்த 22ஆம் தேதி ரயில்வே நிர்வாகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு எவ்வாறு டிக்கெட் கட்டணம் இருந்ததோ, அதே கட்டணம் மீண்டும் பின்பற்றப்படும். கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவித்துவிட்டது.
தினசரி பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தேர்தலை மனதில் வைத்து தற்போது மீண்டும் அதை 10 ரூபாயாகக் குறைத்துள்ளது. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஒன்றிய பாஜக அரசு இவ்வாறு தேர்தலை மனதில் கொண்டு குறைத்தது ஏழை நடுத்தர ரயில் பயணிகளுக்கு பெரிதும் ஆறுதலை அளித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ்கட்சி சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன் பயணிகள் ரெயிலில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியபோது பாஜக அரசு 30 ரூபாயாக உயர்த்தியது. கட்டண உயர்வால் ஏழை நடுத்தர வர்க்க பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். தற்போது பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைத்துள்ளது. ஏழைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
The post கொரோனா காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் திடீர் குறைப்பு appeared first on Dinakaran.