×

தர்மபுரியில் விடுமுறை நாளில் கூட்டுறவு வங்கியை திறந்து லாக்கர் முன் சிறப்பு யாகம்

*அதிகாரிகள் விசாரணை

தர்மபுரி : தர்மபுரியில், கூட்டுறவு வங்கியில் லாக்கர் முன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி கடைவீதி பகுதியில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் லாக்கர் முன் பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர். விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பூஜை காலை 8.30 மணி வரை நடந்ததாக தெரிகிறது. வாடிக்கையாளர்களின் பணம், நகைகள், மதிப்பு மிகுந்த ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்கக்கூடிய லாக்கர் முன் சாமி படம் வைத்து குத்துவிளக்கேற்றி, நெருப்பு மூட்டி, புரோகிதர் மூலம் மந்திரங்கள் சொல்லி யாக பூஜையானது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

வங்கியின் துணை பதிவாளராக பணியாற்றி வரும் ராஜா, தனது மனைவியுடன் லாக்கர் முன் அமர்ந்தபடி பூஜையை நடத்தியதாகவும், மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி பகுதியிலுள்ள வங்கிக்குள் நடைபெற்ற இந்த பூஜை விவகாரம் வெளியே தெரிந்துவிடாதபடி, வங்கியின் ஜன்னல், கதவுகளை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு பூஜையை நடத்தியிருக்கின்றனர்.

வங்கியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களும், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலரும் இந்த பூஜையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. வங்கி லாக்கர் முன் நெருப்பு மூட்டி எதற்காக அக்னி பூஜை நடத்தப்பட்டது? யாருக்காக நடத்தப்பட்டது? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த வங்கி கணினி மயமாக்கப்பட்டபோது, பல கோடி முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜோதிடர் ஒருவர் கூறிய ஆலோசனையின் பேரில், அதே வங்கிக்குள் இந்த அக்னி யாக பூஜை நடைபெற்றதாகவும், வங்கிக்குள் நடைபெற்று வரும் தொடர் முறைகேடுகள், மோசடிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்களின் பொது சொத்தான வங்கிக்குள் தங்களது சொந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வங்கியை தவறாக பயன்படுத்தியும், ஆபத்தை அறிந்தும் நெருப்பு மூட்டி பூஜை நடத்தப்பட்டிருக்கிறது.

நெருப்பால் ஏதாவது ஒரு வகையில் எதிர்பாராதவிதமாக அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தால் மொத்த வங்கியும் தீக்கிரையாகியிருக்கும். வங்கியில் யாகம் மற்றும் பூஜை நடத்திய அதிகாரிகள் மீது, வங்கியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மேலதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தர்மபுரியில் விடுமுறை நாளில் கூட்டுறவு வங்கியை திறந்து லாக்கர் முன் சிறப்பு யாகம் appeared first on Dinakaran.

Tags : -operative Bank ,Dharmapuri ,City Co-operative Bank ,Dharmapuri Mall ,Pooja ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி