×

பிரதமர் வருகையை கண்டித்து பலூன் பறக்கவிட்டு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

*பல்லடம் அருகே 62 விவசாயிகள் கைது

பல்லடம் : பல்லடம் அருகே அலகுமலையில் பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தியும் கருப்பு பலூன்களை பறக்க விட்டும் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு ஒன்பது அம்ச கோரிக்கையாக வைத்து, அன்று முதல் இன்று வரை தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கொள்முதல் செய்ய வேண்டுமென 2006ம் ஆண்டு வழங்கப்பட்ட பரிந்துரையை அன்றைய காங்கிரஸ் அரசும் அமல்படுத்தவில்லை. கடந்த 2014ம் ஆண்டு பாஜ பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50சதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்வோம். கொள்முதல் செய்வோம் என விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என அறிவிப்பு செய்து அதையும் அமல்படுத்தாமல் ஏமாற்றிவிட்டார்.

மேலும் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற்றபோது விவசாய சங்கங்களுக்கு கடிதத்தின் மூலமாக அளித்த உறுதியின்படி எம்.எஸ். சாமிநாதன் ஆணையத்தின்படி விலை நிர்ணயமும், கொள்முதலும் செய்யப்படும் என்கிற என்கிற வாக்குறுதியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 14 லட்சம் கோடிகளை பெரு நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யாதது அநியாயத்தின் உச்சகட்டம்.

பிரதமர் மோடி தன்னுடைய நண்பர் அதானி பெரும் லாபம் ஈட்டுவதற்காக பாமாயிலுக்கு எதிரான இறக்குமதி வரி 44 சதமாக இருந்ததை 32 சதமாக குறைத்தனால், தேங்காய் எண்ணெயைவிட பாமாயிலின் சந்தை விலை லிட்டருக்கு ரூ.40 குறைந்துவிட்டது. இதன் காரணமாக தேங்காய் எண்ணையின் சந்தையை பாமாயில் பிடித்துக்கொண்டதால், தேங்காய் எண்ணெய் விற்பனை ஆகாததால் ரூ.20க்கு விற்று வந்த ஒரு தேங்காய், தற்போது ரூ.10க்கு விற்று வருவதால் இந்தியாவில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு அளித்த எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். மேலும் பஞ்சாப் எல்லையில் அமைதியாக அறவழியில் போராடும் விவசாயிகள் மீது கொடுமையாக ஆயுத தாக்குதல் நடத்தி இளம் விவசாயி சுபாகரன் சிங்கை கொடுமையாக கொலை செய்துள்ளார்கள். மேலும் 5 விவசாயிகளின் உயிர் மருத்துவமனையில் ஊசலாடி கொண்டிருக்கிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் போராடுகிற விவசாயிகள் மீது தவறான அவதூறுகளை தொடர்ந்து பாஜ செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே பல்லடத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 7 பெண்கள் உள்பட 62 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post பிரதமர் வருகையை கண்டித்து பலூன் பறக்கவிட்டு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palladam Palladam ,Tamil Nadu Farmers' Protection Association ,Modi ,Alakmalai ,Palladam ,
× RELATED மணல் லாரிகள் சிறைபிடிப்பு