×

சூரியவீடு இலவச மின்சார திட்டம் அமல்

சேலம், பிப்.28: சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், பயனடைய வீட்டு மின்நுகர்வோர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி செய்து மானியம் பெறலாம் என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மூலம் பிரதமமந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் இத்திட்டத்தில் வீட்டு மின்நுகர்வோர்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் பகிர்மான வட்டங்கள் மூலம் மக்களிடையே சூரிய வீடு இலவச மின்சார திட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டு, வீடுகளில் சோலார் பேனல் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிக விரைவாக 25லட்சம் வீடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இந்த சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறும் பயனாளிக்கு, ஒரு கிலோ வாட்டிற்கு ₹30 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ₹60 ஆயிரமும், 3 கிலோ வாட் மற்றும் அதற்குமேல் ₹78 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் வழங்கப்படும் மானியம், நுகர்வோரின் வங்கிக்கணக்கில் நேரடியாக, சூரிய திட்டப்பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். ஒரு கிலோ வாட் சூரிய தகடு மூலம் ஒரு நாளில் 4 யூனிட் முதல் 5 யூனிட் வரை உற்பத்தி செய்யும் நுகர்வோர், முதலீட்டை மிக குறுகிய காலத்தில் திரும்ப பெற்றுவிடலாம். இத்திட்டத்தில் பயன் பெற http://pmsuryaghar.gov.in/, www.solarrooftop.gov.in, www.pmsuryaghar.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்திட வேண்டும். அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் கூடுதல் ஆவணங்கள் ஏதும் இன்றி, மின் கட்டண ரசீதை மட்டுமே பதிவேற்றம் செய்து இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் சேலம் மற்றும் மேட்டூர் மின்பகிர்மான வட்டங்களில் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த இரு மின் பகிர்மான வட்டங்களிலும் தற்போது மக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீடுகளில் சோலார் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்திட அறிவுறுத்துகின்றனர். இதுபற்றி சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி கூறியதாவது: சூரிய வீடு இலவச மின்சார திட்டம், வீடுகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

கமர்ஷியல் மின் இணைப்புகளுக்கு கிடையாது. மின்கட்டணமாக ₹1000, ₹1500 என செலுத்தும் மின் பயன்பாட்டு நுகர்வோர்கள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அவர்கள் தங்களது வீட்டில் சுமார் 100 சதுர அடி பரப்பில் ஒரு கிலோ வாட்டிற்காக சோலார் பேனல் அமைத்தால், தினமும் 4 முதல் 5 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்த ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ₹65 ஆயிரம் வரை செலவாகும். அதில், ₹30 ஆயிரத்தை மானியமாக அரசு கொடுக்கிறது. பின்னர், மாதந்தோறும் மின் கட்டணம் என்பது மிக குறைந்த அளவே செலுத்த வேண்டி வரும். அதன்மூலம் 20 முதல் 30 மாதங்களில் செலவிட்ட தொகையை எடுத்துவிடலாம். அதன்பின் 25 ஆண்டுகளுக்கு மேல் இந்த சோலார் பேனல் மூலம் மின் பயன்பாட்டை பயன்படுத்திட இயலும். குறிப்பாக இரு மாத மின் நுகர்வு கட்டணமாக 400 யூனிட்டுகளுக்கு மின்வாரியத்திற்கு ₹1,125 செலுத்த வேண்டிய நிலையில், சூரிய மின்தகடு பொருத்திய பின் ₹206 மட்டுமே செலுத்தினால் போதும். 919 ரூபாயை இந்த திட்டத்தின் மூலம் மின் நுகர்வோரால் சேமிக்க முடியும். 500 யூனிட் பயன்படுத்துவோர் ₹1,240ஐயும், 600 யூனிட் பயன்படுத்துவோர் ₹1,495ஐயும் சேமிக்க முடியும்.

அதனால், சேலம் மாவட்டத்தில் பிரதமமந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மக்கள் பயன்பெறலாம். இத்திட்டம் தொடர்பாக அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சூரியவீடு இலவச மின்சார திட்டம் அமல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Surya Vedu ,Dinakaran ,
× RELATED வங்கியில் திருட முயன்ற பட்டதாரி வாலிபர் கைது