×

நுண்ணீர் பாசனத்தில் 32 தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு 1,102 ஏக்கர் தரிசு நிலத்தில் சாகுபடி கடந்த காலங்களைப் போல் கால்நடைகளுக்கு மலிவு விலையில் வைக்கோல் வழங்க வேண்டும்

புதுக்கோட்டை,பிப்.28: கடந்த காலங்களை போல் கால்நடைகளுக்கு மலிவு விலையில் வைக்கோல் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார். வேளாண்மைதுறை இணை இயக்குநர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் ஜி.எஸ். தனபதி:
புதுக்கோட்டை மாவட்டம் முழுமையும் பருவமழை குறைவால் கடும் வறட்சி நிலவுகிறது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இந்த ஆண்டும் மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது. மாவட்டம் முழுவதும் அனைத்து நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும், உரிய பயிர்க்காப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல மலிவு விலையில் கால்நடைகளுக்கு வைக்கோல், குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ்:
தொடர்ந்து 5 ஆண்டுகளாக கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிக்கு பயிர்க் காப்பீடு கிடைக்கவில்லை. நிகழாண்டில் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா நிலத்திலுள்ள மேட்டுப்பகுதியை எடுத்து, மற்றொரு சர்வே எண் உள்ள பள்ளமான பகுதிக்கு சமன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். நிகழாண்டில் மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் போதுமான தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

The post நுண்ணீர் பாசனத்தில் 32 தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு 1,102 ஏக்கர் தரிசு நிலத்தில் சாகுபடி கடந்த காலங்களைப் போல் கால்நடைகளுக்கு மலிவு விலையில் வைக்கோல் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,District Collector ,Mercy Ramya.… ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...