×

மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு

தர்மபுரி, பிப்.28: தர்மபுரி மாவட்ட சைபர் கிரைமிற்கு கடந்த ஆண்டு 1800 புகார்கள் வந்துள்ளன. இதில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ₹20.99 லட்சம் பணம் மற்றும் பொருட்களாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் தவறான பயன்பாட்டின் விளைவாக இணைய வழி குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவைகளை தடுக்க விழிப்புணர்வு மட்டுமே வழி என்கின்றனர் துறைசார் வல்லுநர்கள். இந்த கணினி யுகத்தில் ஆன்ட்ராய்டு போன் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. பெரியவர்களை காட்டிலும் பல வீடுகளில் குழந்தைகள் கைகளில் தான் ஆன்ட்ராய்டு போன் அதிகம் உள்ளது. இதிலும் யூடியூப் உள்ளிட்ட சில செயலிகளை 18 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையிலும் யாரும் பின்பற்றுவதில்லை. தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எளிமையான கையடக்க உபகரணம்தான் என்றாலும், இதனால் ஏற்படும் தீமைகள் அதிகம். ஆன்ட்ராய்டு போனை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் முறையற்ற கையாளுதலால் சிக்கல்களில் சிக்கித்தவிக்கின்றனர்.

ஒருசில நேரங்களில் இணையவழி குற்றங்கள் மரணத்தில் முடிகின்றன. இணைய வழிகுற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிவது சிரமமாக உள்ளது. விழிப்புணர்வு ஒன்றே இணையவழி குற்றங்களை தடுக்கும் கேடயம் என்கின்றனர் காவல்துறையிரும், துறைசார்ந்த வல்லுநர்களும். 90 சதவிகித இணைய வழி குற்றங்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்ட்ராகிராம் வாயிலாகவே நடக்கிறது. செல்போன் செயலிகளை பயன்படுத்துவோர் அவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தகவல்களை பதிவிடுவதே இணைய வழி குற்றங்கள் ஏற்பட காரணமாக உள்ளன. இலவச வைபை வசதியை பயன்படுத்தும் போது கூட தனிநபரின் சுயதகவல்களை பதிவு செய்யப்படுவதால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். மொத்தத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இணைய வழி குற்றங்களை தடுக்க கடந்த 2021 பிப்ரவரி 8ம் தேதி மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டது. எஸ்பி அலுவலக கட்டிடத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பிரிவுக்கு தினசரி சுமார் 5 புகார்கள் வருகின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 1800 புகார்கள் வந்துள்ளன. இதில் 52 வழக்கு பதிவு செய்யப்பட்டு, ₹20.99 லட்சம் பணமாகவும், பொருட்களாகவும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று நல்லம்பள்ளியை சேர்ந்த கவியரசு (22) என்பவர், போலியான கேஒய்சி அப்டேசன் லிங்க் மூலமாக இழந்த பணம் ₹6.99 லட்சம், தர்மபுரியை சேர்ந்த அரவிந்தன் (25) ஆன்லைன் கோர்ஸ் படிப்பதற்காக ஆன்லைனில் செலுத்தி இழந்த பணம் ₹18,831, அரூரை சேர்ந்த இளவரசன் (26) சாப்ட்வேர் வாங்குவதற்காக ஆன்லைனில் செலுத்தி இழந்த பணம் ₹20,800 மற்றும் பஞ்சப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் (29) என்பவர் போன்பேவில் தனது நண்பருக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக, 10 இலக்க செல்போன் எண்ணில் ஒரு எண்ணை தவறாக பதிவிட்டு இழந்த பணம் ₹75 ஆயிரம் என 4 பேரின் ₹8 லட்சத்து 13 ஆயிரத்து 631 பணத்தை மீட்டு இழந்தவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் படி, தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மோசடி செய்யப்பட்ட பணம் சென்றடைந்த வங்கி கணக்குகளை முடக்கியும், சம்மந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் வங்கி கணக்கு உரிமையாளர்களை தொடர்புகொண்டும் இழந்த முழு பணமும் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டு பணத்தை திரும்பபெற்ற மனுதாரர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக எஸ்பியை நேரில் வந்து சந்தித்தனர்.

இதுகுறித்து எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் கூறியதாவது:
தர்மபுரி சைபர் கிரைமிற்கு தினசரி 5 புகார்கள் வீதம் கடந்த ஆண்டு 1800 புகார் மனுக்கள் வந்துள்ளன. இதில் வழக்குப்பதிவு செய்து ₹20.99 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் தான் அதிகம் ஏமாறுகின்றனர். செல்போன் அதிகம் பயன்படுத்தும் நபர்கள், ஐ.டி., பீல்டில் உள்ளவர்கள் அதிகம் ஏமாறுகின்றனர். இதுபோன்ற பணமோசடி புகார்களுக்கு உடனடியாக 1930 என்ற சைபர்கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் புகாரினை பதிவு செய்யலாம்.

மேலும் போலியான அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் நம்பி உங்களது வங்கி கணக்கின் தகவல்களான அக்கவுண்ட் நம்பர், ஏடிஎம் கார்டு நம்பர், பின் நம்பர், சிவிவி நம்பர் மற்றும் ஓடிபி ஆகிய விவரங்களை செல்போனில் யாரிடமும் பகிர வேண்டாம். செல்போனிற்கு வரும் லிங்க் மூலமாக கேஒய்சி, பேன் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டாம். போலியான இணையதளம் மற்றும் செயலிகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விவரங்களை பகிரவேண்டாம். பார்ட் டைம் ஜாப் மற்றும் குறைந்த வட்டிக்கு அதிக லோன் தருவதாகவும் வரும் எஸ்எம்எஸ், கால், வாட்ஸ்அப் மேஸ்சேஜ்களை நம்பி ஏமாற வேண்டாம். மிக முக்கியமாக கடன் தரும் செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இவ்வாறு எஸ்பி கூறினார்.

The post மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED தருமபுரியில் இடியுடன் பெய்த கோடை...