×

கூட்டுறவு சங்கங்களில் நிலுவைக்கடன் செலுத்த மார்ச் 2ல் சிறப்பு முகாம்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. கடன்தாரர்களின் வட்டி சுமையை குறைக்கவும், கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் நிலுவையுள்ள தவணை தவறிய கடன்களை வசூல் செய்து இந்த நிறுவனங்களின் நிதிநிலையை பலப்படுத்தவும் ஒரு சிறப்பு கடன் தீர்வு திட்டம் முதல்வரின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்தப்படும் என 2023-24 கூட்டுறவுத்துறை மானியக்கோரிகையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் கடந்த 2023 டிச.13ம் தேதி இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள், சிறுவணிகக் கடன், தொழிற்கடன், வீட்டுவசதிக்கடன், சுயஉதவிக்குழுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாராக் கடன்களுக்கும், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய இனங்களும் இத்திட்டத்தில் பொருந்துகின்றன. மேலும், 2022 டிச.31ம் தேதி முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

அந்தவகையில் கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9 சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மேலும், இத்திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையில் 25 சதவீதத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் செலுத்தி, வங்கி மற்றும் சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, மீதமுள்ள 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 6 மாத த்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், இந்த சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் பயனை கடன்தாரர்கள் முழுமையாக பெறும் நோக்கில் வரும் மார்ச் 2ம் தேதி அந்தந்த வங்கி மற்றும் சங்க வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மார்ச் 13ம் தேதி வரை கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அரசின் சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

The post கூட்டுறவு சங்கங்களில் நிலுவைக்கடன் செலுத்த மார்ச் 2ல் சிறப்பு முகாம்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும்: பெரியகருப்பன்