×

ஆந்திர அரசு தன்னிச்சையாக பாலாற்றில் புதிய அணையை கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்: அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1892ம் ஆண்டைய மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். ஒப்பந்தப்படி மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள் கீழ் பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரை தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரை திருப்புவதற்கும், நீரை தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரசனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018ல் முடிந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் இருக்கும் போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது.

இதை மீறி ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமேயானல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

The post ஆந்திர அரசு தன்னிச்சையாக பாலாற்றில் புதிய அணையை கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்: அமைச்சர் துரைமுருகன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Andhra govt ,Palar ,Supreme Court ,Minister ,Duraimurugan ,CHENNAI ,Water Resources ,Andhra government ,Bala ,Dinakaran ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...