×

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

 

ஈரோடு, பிப்.28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டத்தில், காப்பீட்டு நிறுவனத்தினர் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அரசு நிதித்துறை கூடுதல் செயலாளரும், ஓய்வூதிய இயக்கத்தின் இயக்குநருமான ஸ்ரீதர் முன்னிலையில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.

தொடா்ந்து, ஓய்வூதியதாரர்களிடம் இருந்து ஓய்வூதியம், ஊதிய நிர்ணயம், நிலுவை தொகை, பொது சேமநல நிதி தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்று, அந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தினர் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள பலன்களை விரைந்து வழங்க அறிவுறுத்தினர்.

மேலும், கடந்த மாதம் நடைபெற்ற ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெற்ற மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? என ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அடுத்த ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் வருகிற மார்ச் மாதம் 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கருவூல அலுவலர் வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குருநாதன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை ஓய்வூதியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode Collectorate ,Erode ,Erode Collector ,Day ,Erode Collector's Office ,Dinakaran ,
× RELATED 2ம் கட்டமாக சுழற்சி முறையில் மின்னணு...