×

விபத்துக்குள்ளான லாரி மீது ரயில் மோதாமல் இருக்க டார்ச் லைட் அடித்து நிறுத்திய தம்பதியருக்கு ₹5 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம் ‘எஸ்’-வளைவு என்ற தமிழக-கேரள எல்லை பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்தில் இருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை-கொல்லம் இரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையில் இருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோயில் திருவிழா சிறப்பு பயணிகள் ரயில் வரும் சத்தத்தை கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார். இதையடுத்து தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை தடுத்துள்ளனர்.

உடனடியாக தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

The post விபத்துக்குள்ளான லாரி மீது ரயில் மோதாமல் இருக்க டார்ச் லைட் அடித்து நிறுத்திய தம்பதியருக்கு ₹5 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CM ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu Government ,Tirumangalam-Kollam National Highway ,Tamil Nadu-Kerala ,'S'-bend ,Puliarai Village ,Tenkasi District ,Sengottai Circle ,Chief Minister ,
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...