×

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்கள்: பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி கவுரவித்தார்; 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் சக்திகள் என புகழாரம்

திருவனந்தபுரம்: ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் அறிவித்தார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கித் பிரதாப் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் சக்திகள் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சமீப காலமாக பல சாதனைகளை செய்து வருகிறது. சந்திரயான் 3 விண்கலம் சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி பெரும் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, விண்வெளி சாதனையில் அடுத்த மைல்கல்லாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்கள் 3 நாட்கள் சோதனை நடத்தி பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்பி வருவார்கள். இந்த திட்டத்திற்காக ரூ.9,023 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் பல கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக விண்வெளிக்கு செல்லும் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதலில், இந்திய விமானப்படை மற்றும் இஸ்ரோ இணைந்து 12 பேரை தேர்வு செய்து பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி அவர்களில் இருந்து 4 பேரை தேர்வு செய்தது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர்கள் 4 பேரும் ஆரம்பகட்ட பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பயிற்சி முடித்துக் கொண்டு தற்போது இவர்கள் பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். விண்வெளி சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களின் உடல்நிலையையும், மனநிலையையும் தயார்படுத்துவதே இந்த பயிற்சிகளின் பிரதான நோக்கம். ககன்யான் திட்டத்தின் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்று வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளனர். இந்நிலையில், ககன்யான் திட்டம் மூலம் முதல் முறையாக விண்வெளிக்கு செல்ல உள்ள 4 வீரர்களின் பெயர், விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 4 பேரின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட்டு அறிமுகம் செய்துவைத்தார்.

இந்திய விமானப்படை குரூப் கேப்டன்களான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கித் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இவர்களில் அஜித் கிருஷ்ணன் சென்னையை சேர்ந்தவர் ஆவார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள 4 இந்திய வீரர்களை அறிமுகம் செய்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பாதையிலும் நிகழ்காலத்தை மட்டுமல்ல, வரும் தலைமுறையின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் சில நிமிடங்கள் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை இன்று அத்தகைய ஒரு நிமிடமாகும். சற்று முன்பு இந்தியாவின் 4 ககன்யான் விண்வெளிப் பயணிகளை நாம் பார்த்தோம். அவர்கள் வெறும் 4 தனிப்பட்ட நபர்கள் அல்ல. 4 மனிதர்கள் மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களின் நீண்ட கால விருப்பத்தை விண்வெளிக்கு கொண்டு போக உள்ள 4 சக்திகள் ஆவர்.

40 வருடங்களுக்குப் பின் தான் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளார். இம்முறை நேரம் நம்முடையது, கவுன் டவுன் நம்முடையது, ராக்கெட்டும் நம்முடையது. 2035க்குள் விண்வெளியில் நமக்கு சொந்தமாக ஒரு விண்வெளி ஆய்வு மையம் உருவாகும். அதன் மூலம் விண்வெளியில் யாருக்கும் தெரியாத பல ரகசியங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். இந்திய விண்வெளிப் பயணிகள் நம்முடைய சொந்த ராக்கெட்டில் விண்வெளியில் இறங்குவார்கள். இந்த விண்வெளிப் பயணிகளை சந்திக்கவும், நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

குழுவின் தலைவர் யார்?
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிரசாந்த் கிருஷ்ணன் நாயர் தான் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனான இவர் 1999ல் விமானப்படையில் சேர்ந்தார். பிரசாந்தின் தந்தை பாலகிருஷ்ணன் நாயர், தாய் பிரமீளா. பாலகிருஷ்ணன் நாயர் குவைத்தில் பணிபுரிந்து வந்ததால் நான்காம் வகுப்பு வரை பிரசாந்த் அங்கு தான் படித்தார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி பிளஸ் டூ வரை பாலக்காடு அருகே பல்லாவூரில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்தார். பாலக்காட்டிலுள்ள என்எஸ்எஸ் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தான் இவர் தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தார்.இதன் பின்னர் 1999ல் இந்திய விமானப்படையில் இணைந்தார்.ககன்யான் திட்டத்தில் செல்லும் நான்கு பேரும் இந்திய விமானப் படையின் பைலட்டுகள் ஆவர். இவர்களில் மூன்று பேர் தான் விண்வெளிக்கு செல்வார்கள்.

40 ஆண்டுக்கு முன்…
இந்தியாவை பொறுத்த வரை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பறந்திருக்கிறார். அவரை பறக்க வைத்தது ரஷ்யாதான். அப்போது தொடங்கி தற்போது வரை விண்வெளி துறையில் ரஷ்யா-இந்தியா உறவு பிரிக்க முடியாததாக இருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யாவில் பயிற்சி
ககன்யான் திட்டத்திற்காக இவர்கள் நான்கு பேரும் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கடந்த சில வருடங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ரஷ்யாவில் 13 மாதங்களும், கடல், ஆகாயம், பாலைவனம், கரை, பனி உள்பட அனைத்து காலநிலைகளில் உள்ள பகுதிகளிலும் தீவிர பயிற்சியை முடித்துள்ளனர். மேலும் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சியுடன், விளையாட்டு மற்றும் உடல் ரீதியாகவும், யோகா பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்திலும், விண்வெளி ஆய்வு மையத்திலும் இப்போதும் இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படையில் உள்ள சுகோய் போர் விமானங்களை இவர்கள் இயக்கியுள்ளனர்.

The post ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்கள்: பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி கவுரவித்தார்; 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் சக்திகள் என புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Kaganyan ,Modi ,Thiruvananthapuram ,Prashant Balakrishnan Nair ,Ajit Krishnan ,Ankit Pratap ,Subanshu Shukla ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...